செவ்வாய், 29 ஏப்ரல், 2014

எந்தன் தேசத்தின் குரல்...

ஏப்ரல் 26 அன்று நடந்த காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் உள்பட மூன்று ராணுவ வீரர்கள் உயிர் நீத்தனர்.இந்த செய்தியை படித்து கடந்து விட்டவர்களுக்கு......

ஒவ்வொரு முறையும் போரில்,எல்லையில்,நாட்டுக்குள் என்று உயிர் துறக்கும் ராணுவ வீரர்களைப் பற்றி படிக்கும் போது கண்கள் பனிப்பதுடன் மட்டுமே  நாட்டுப்பற்று நின்றுவிடுகிறது.இந்த முறையும் அப்படிதான்!ஆனால் என் வயதையொத்த ஒரு பெண் நாட்டுக்காக கைபெண்ணாய் ஆனால் முகத்தில் ஒருவித ஏற்புதலுடன் ;என் மகள் வயதிலுள்ள ஒரு குழந்தை அப்பாவின் சவப் பெட்டிக்கு அருகில் எப்போதும் போல் சிரிப்புடன்!இந்தக் காட்சி மனதிற்குள் வலியாய் ....உயிருக்குள் ரணமாய்...!

உயிர் நீத்தது மூன்று பேர்!இந்த ஒருவனை நான் குறிப்பிட்டு எழுத காரணம்...என் தாய்மொழி பேசும் ஒருவன் 22 மொழிகளை உள்ளடக்கிய பரந்த எம்  தாய்மண்ணிற்காக உயிர் தியாகம் செய்திருக்கிறான்.இவனைப் போன்றோர்களை யாம் எப்படி கவுரவிப்போம்?

இந்திய சுதந்திரத்தைப் பற்றி நினைத்தாலே "தண்ணீர் விட்டா வளர்த்தோம் ; எங்கள் செந்நீர் விட்டல்லவா வளர்த்தோம்!" என்ற வீர உரை நெஞ்சத்தை பிசையும்.அப்படி செந்நீர் விட்டு வளர்த்தெடுத்த தேசம் அரசியல்வாதிகளிடம் மீண்டும் அடிமையாயிருக்கையில் இன்னும் தம் செந்நீரை சிந்தி எம் சுதந்திரத்தை உறுதி செய்யும் எம் உடன்பிறப்புகளுக்கும் அவர்கள் குடும்பத்தாரின் தியாகத்திற்கும் எப்படி மரியாதை செய்வோம்?எல்லையில் எதிரியை விரட்டியடித்து தேவைப்பட்டால் தம் இன்னுயிரையும் தந்து நம் அமைதி வாழ்வை உறுதி செய்யும் வீரனுக்கு நாம் செய்யப் போகும் கைம்மாறு என்ன?

நாட்டுக்குள் சுற்றும் எதிரிகளான லஞ்சம்,ஊழலுக்கு துணை போகாமல், விளை  மண்ணை வீட்டு நிலமாக மாற்றாமல்,குடிப்பழக்கத்தை விடுத்து பின் வரும் தலைமுறைகளை காப்பாற்றி,மற்ற உயிர்களுக்கு மதிப்பளித்து, சிறியதேயானாலும் தானம் அளித்து வாழ்ந்தோமேயானால் நாமும் நாட்டுப்பற்று உடையவர்களே!சிந்தனை செயல்களாகும்;செயல்கள் பழக்கங்களாகும்;பழக்கங்கள் ஒரு கலாச்சாரமாகும்;ஒரு கலாச்சாரம் அடுத்த தலைமுறையை வளர்த்தெடுத்து பாதுகாக்கும்!

கரிகாலனும், இராச ராசனும் வாழ்ந்த எம் புனித தேசத்தில் கரை(றை ) வேட்டிகளே வாழ்கிறார்கள்!நல்லவர்கள் உயிர் தந்து காக்கும் நம் தேசத்தை கொள்ளையர்கள் கையில் விட்டு வைக்காமல் இனி அரசியலை நம் குழந்தைகளுக்காவது சொல்லிக்கொடுப்போம்;நேர்மையான தேசத்தை உருவாக்க விதைப்போம் நெஞ்சில்!



ஞாயிறு, 8 டிசம்பர், 2013

உன்னைப் போல் ஒருவன் !

ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸை விட பெரும்பான்மை!-இதை கேட்டதும் முதலில் எனக்கு ஆச்சரியம்தான்!கேஜ்ரிவாலைப் பற்றி அதிக அபிப்ராயம் ஏற்பட்டதில்லை காரணம் அவர் அன்னா ஹசாரேவின் செயல்பாட்டுக் குழுவிலிருந்து வெளியே வந்தவர்;ஹசாரேயின் போராட்டங்கள் நிகழ்த்திய எழுச்சி சில மாதங்களிலேயே பிசுபிசுக்கத் தொடங்கிய காரணமும் புரியாததால் அவரிடமிருந்து வெளிவந்த கேஜ்ரிவால் மீதும் எந்த தாக்கமும் என் மனதில் ஏற்பட்டதில்லை! 'ஹசாரேயை விட்டு விலகல்;அரசியல் பிரவேசம்' என்ற தொடர்ந்த ஊடக வெளிச்சத்தில் இருந்ததாலும் நன்மதிப்பு ஏற்படாதிருந்திருக்கலாம்!ஊழலற்ற அரசு என்பது நம் எல்லோருடைய கனவாக இருந்தாலும் அது ஒன்றை மட்டுமே வலியுறுத்துவதில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு விளையப் போகும் நன்மை என்னவாக இருக்க முடியும்?
   டெல்லியில் பா.ஜ.க ஆட்சி அமைத்தாலும்,வலுவான எதிர்க்கட்சி நிலையில் ஆம் ஆத்மி!இன்று கேஜ்ரிவாலின் பேட்டியைப் பார்த்தபோது மிக வித்தியாசமாக தெரிந்தார். " டெல்லி முழுமைக்கும் ஒரே விதமான வாக்குறுதிகளைக் கூறுவதன் மூலம் எல்லாத் தரப்பினருக்கும் தேவையானது கிடைக்கப் போவதில்லை.எனவே 70 தொகுதிகளுக்கும் 70 விதமான பட்டியல் தயாரித்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்"-இதுதான் அவருடைய எளிமையான ஆனால் மிகச்சரியான வார்த்தைகளாக இருந்தது.தேவையைத் தவிர தேவையற்றவைகள்தான் இன்று நமக்கு அதிகமாகக் கிடைக்கின்றன.எனவே அத்தியாவசத்தின் முக்கியத்துவத்தை நோக்கி மக்களை நகர்த்தும் இந்தக் குடிமகன் சிறந்த தலைவனாக மனமார வாழ்த்துவோம்!



திங்கள், 2 டிசம்பர், 2013

களையெடுக்க வேண்டிய கலாச்சாரம்???!!!

நான் இன்று 'பாண்டிய நாடு' திரைப்படத்தைப் பார்த்தேன்.நடுத்தர வர்க்க,பாசமிக்க யதார்த்தமான ஒரு குடும்பத்தின் தலைமகனை ஒரு அதிகார வர்க்கம் கொலை செய்து விடுகிறது.அதற்காக ஒருபுறம் பழிவாங்கத் துடிக்கிறான் தம்பி;மறுபுறம் தன மகனை இழக்க நேர்ந்ததற்கு காரணமானவனை கொல்வதற்கு தன்  வீட்டை அடமானம் வைத்து கூலிப்படை அமர்த்துகிறான் தகப்பன்.இறுதியில் இளவல் தன தமையனின் கொலைக்கு காரணமானவர்களின் உயிர்களை பலி கொள்கிறான்.தகப்பனாரின் நெஞ்சம் ஆனந்தத்தில் நிம்மதி கொள்கிறது,இதுதான் கதை!
           இப்படத்தில் இறந்த மகனுக்காக உருகும் அப்பாவின் நடிப்பில் நெகிழ்ந்த மனம் அவரின் பழிவாங்கும் எண்ணத்தில் நெருட ஆரம்பித்தது.'பழிவாங்குதல்' என்பது ரவுடிகளுக்கு மட்டுமே பொருந்துகிற விசயமா? ஏன் சாதாரண மக்களுக்கு ஏற்புடையதில்லையா என்று தோன்றலாம்; பாதிக்கப்பட்டவர்களுக்குதான் அந்த வேதனையின் வலி புரியும் என தர்க்கமும் செய்யலாம்.உண்மைதான்,தன்னுடைய இரத்த பந்தத்தை அந்நியர் ஒருவர் அடித்துவிட்டால் ஏன் வாய்வார்த்தையாக திட்டிவிட்டாலே நமக்கெல்லாம் கோபம் தலைக்கேறுகையில் -உயிரே போய்விட்ட நிலையில் பதிலுக்கு உயிரை வாங்க வேண்டும் என்ற உத்வேகமும் இயற்கைதானே!இரத்தத்திலேயே உறங்கும் பழிவாங்கும் உணர்வு படைத்தவர்கள்தானே மானிடர்கள் .......!
            இது போன்ற  நிகழ்வுகள் வடசென்னை ,மதுரை மாவட்டங்களிலேயே நடைபெறுவதாக திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது கவனிக்க வேண்டிய விஷயம்!மற்ற மாவட்டங்களில்(ஒரு சில தென் மாவட்டங்களைத் தவிர) இது போன்ற உக்ர சம்பவங்கள் அதிகம் இல்லை என்பதுதான் நான் கூற வந்தது.வடசென்னைவாசிகளின் நிறை குறை மதிப்பீடுகள் யாம் அறியேன் .ஆனால் மதுரை என் புகுந்த வீடு;பொதுவாகவே மதுரைக்காரர்களை பற்றின ஒரு கருத்து "கொஞ்சம் முரட்டுக்குணம்;ஆனால் பாசக்காரர்கள்".எனக்கு இதில் ஒருவிதமான மாற்றுக்கருத்து உண்டு;பாசத்தில் எங்கிருந்து முரட்டுத்தனம் வர முடியும்?ஆனால் அவர்களெல்லாம் அப்படிதான் என்ற என் கணவரின் விளக்கம் இன்றுவரை புரியாதது! 'நாங்களெல்லாம் எப்புடி?' என்ற வசனத்தை நகைச்சுவையாக கூறும் வடிவேலு-க்களையும் மதுரையில் பார்க்கலாம்;அதே வசனத்தை திமிருடன் கூறும் ரவுடிகளையும் அங்கு பார்க்கலாம்!இதுவும் ஒரு மதுரைகாரரின் வாக்குமூலமே!அடியேனுடையது அல்ல!
             இது இந்த மண்ணின் பழக்கம்,இது இந்த மண்ணின் வரலாறு என்று கூறிகூறியே இம்மாவட்டங்கள் வன்முறையையும் சேர்த்தே பல தலைமுறைகளுக்கு கடத்தி வந்து விட்டனர்; இதுதான் உண்மை! அதையே படமாக  எடுத்தும் தங்களின் ஊர்ப்பெருமையாக அறிவிக்கின்றனர் .இப்படிப்பட்ட படங்கள் தேசீய விருதைப் பெறுவதும், இதனால் அதையே மற்ற இயக்குனர்கள் கதைக்களமாக்குவதும்...என்னத்த சொல்ல?
             'பொய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா' என்ற தேவர்மகன் வசனம் பதித்த அழுத்தம் இன்னும் எந்த தென் மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தாத போது எதுக்கு இந்த வெட்டி ஊர் கலாச்சாரம் பேசும் படங்கள் ??



சனி, 6 ஜூலை, 2013

சாதிகள் இல்லையடி பாப்பா!

சமீபத்தில் பத்திரிகைகளில் வந்த இளவரசன்-திவ்யா காதல் தம்பதிகளின் வழக்கு,திவ்யாவின் திடீர் மனமாற்றம்,இறுதியில் இளவரசனின் மரணம் என்ற தொடர் நிகழ்வுகள் நம் கவனத்தை ஏதோ ஒரு வகையில் கலைத்திருக்கும் .அநேகமாக நாம் தற்கொலை செய்து கொண்ட இளைஞனின்  மனமுதிர்வற்றத் தன்மையை சாடியிருப்போம்;அல்லது திடமற்ற முடிவால் இரு உயிர்களை பலி கொண்ட திவ்யாவை வசைபாடியிருப்போம்.

உண்மையில் மனமுதிர்வற்றவர்கள் யார்?காதலித்தவர்களா?காதலை மறுத்து அவர்களைப் பிரித்தவர்களா?பா.ம.க தலைவர் ராமதாசு அவர்கள் கருத்துப்படி 'நாடகக் காதலாகவே' இருக்கட்டும்;அவர்களது பெற்றோர் 'வேலை கிடைத்தபின் திருமணம்' என்று ஏதாவது காரணத்துடன் அவர்களை காத்திருக்க வைத்து காதலின் உணமைத்தன்மையை அறிந்திருக்கலாம் அல்லவா?காத்திருக்க வைத்திருந்தாலே அவர்கள் தங்களுடைய முடிவுகளை மறுபரிசீலனை செய்ய உதவியிருக்கும்.அதை விடுத்து இரு குடும்பங்களின் தனிப்பட்ட விசயத்தில் சாதிக் கட்சிகளை நுழைய அனுமதித்து,சாதிப் பெயரைக் கெடுத்ததாய் தகப்பனார் உயிரை மாய்த்துக் கொண்டு, உணர்வுகளின் அடிப்படையில் தாய் மகளை மடக்கி சாதித்தது... இன்னும் ஒரு உயிரை பலி கொண்டதே!இதுபோல் ஒன்றிரண்டு சம்பவங்கள் ஊடகங்களின் துணையால் வெளிவருகின்றன.ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு சாதியிலும்,மதத்திலும் நடந்தவண்ணம் உள்ளது.எனக்குத் தெரிந்து வேற்று சாதியினனை காதலித்த மகளை கொன்ற தாய்;வேற்று மதத்தினனை மணந்த மகளை 'காதல்' பட பாணியில் இழுத்து வந்து மறுமணம் செய்வித்த தந்தை என்று நான் சார்ந்த சமூகத்தில் ஏராளமான விஷயங்கள் நடந்ததுண்டு.காதல் பதின்பருவத்தை கடக்கும் அநேகமானவர்களுக்கும் வரக்கூடிய ஹார்மோன் விளைவுதான்.இதை உடல் மற்றும் மனம் சார்ந்த நிகழ்வாகப் பாராமல் தான் சார்ந்த சமூக மற்றும் சாதி,மத கலாச்சாரங்களின் அழுத்தங்களாக உணர்வதாலேயே அனைத்துப் பெற்றோர்களும் மறுப்பை மட்டுமே பதிவு செய்கின்றனர்.இது மட்டுமல்லாமல் தான் பெற்ற பிள்ளைகள் தமக்கு  உடமை என்று கருதுவதாலும் அவர்கள் தன்னுடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்க கடமைப்பட்டவர்கள் என்கிற ரீதியில் 'நான் பார்க்கும் மாப்பிளையை/பெண்ணைதான் நீ திருமணம் செய்ய வேண்டும்' என்ற தம் முடிவை அவர்கள் மீது  திணிக்கிறார்கள்.மாறாக பிள்ளைகளின் ஆசைகளுக்கு மதிப்பு கொடுத்து,கால அவகாசம் எடுத்துக் கொண்டு அவர்களுடைய மகிழ்ச்சிக்கு ஆவண செய்தால் இந்த சாதிச்சணடைகள் தாமாகவே ஒரு முடிவுக்கு வரும்.




திங்கள், 24 ஜூன், 2013

கருமமே கண்ணாகக் கொண்ட வீரன்!

இன்று எதேச்சையாக காமராஜரைப் பற்றிய வலைத்தளத்திற்குள் செல்ல நேரிட்டது.பின் அவரைப் பற்றி விரிவாக படிக்க ஆரம்பித்தேன்.படித்ததும் உண்டான உணர்வுக் குவியலை  பகிர்ந்து கொள்ள விரும்பியே இப்பதிப்பு!

எங்கள் வீட்டில் இரு தலைவர்களின் படம் உள்ளது என்றால் அது எம்.ஜி.ஆர் மற்றும் கர்மவீரர் காமராஜர் ஆகியோருடையதுதான்!ஒருமுறை எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் குடிபெயர்ந்ததால் வீட்டிலிருந்த வேண்டாதப் பொருட்களை அப்புறப்படுத்தினர்;அதில் காமராஜருடைய படமும் இருந்தது;என் அப்பாவோ அந்தப் படத்தை கேட்டு வாங்கி வந்தார்,எங்களுக்கு எதற்கு இத்தனைப் படம் என்று கோபம்தான் வந்தது.எதற்கு இந்த அப்பா இப்படி காமராஜர் என்றால் உருகுகிறார் என்று சிறு எரிச்சலும் உண்டு;அப்பாவும் காமராஜரின் சத்துணவுத் திட்டம்,பாலம் கட்டியது,தொழிற்சாலைகள் அமைத்தது என்று காமராஜரின் பெருமைகளைக் கூறுவார்.கேட்பதோடு சரி!பள்ளியிலும் தமிழ் பாடத்தில் அவரைப் பற்றி வெறும் கடமையாகவே படித்ததால் அவரைப் பற்றி ஒருபோதும் உயர்வாக எண்ணியதில்லை!
இன்று திரும்பவும் அவரைப் பற்றி படிக்க நேர்ந்ததில் ஒரு தனி ஈர்ப்பை ஏற்படுத்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.வெறும் பத்து ஆண்டு ஆட்சி காலத்திலேயே இவ்வளவு செய்ய முடியுமென்றால் ஐந்து முறை முதலமைச்சர் என்று பெருமை கூறி சுரண்டியவர்களையும்  சற்று நினைத்துப் பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.அவர் இறந்தபோது அவருடைய சட்டை பையில் வெறும் அறுபத்தி ஆறு ரூபாய்தான் இருந்தது என்று படிக்கையில் இப்படி ஒரு மனிதர் ஊனோடும் உயிரோடும் இந்த பூமியில்தான் உலவினார் என்று பெருமிதத்தில் கண்ணீர் முட்டியது.என் அப்பாவின் உணர்வை இன்றுதான் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த மாபெரும் மனிதரின் சில சாதனைகளென்று நான் படித்ததில் பட்டியலிட்டவை...இதோ!


தொழில் துறைகளை வளர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்த தொடங்கியது காமராஜர் அரசு. காமராஜர் ஆட்சியின் இறுதியில் தமிழகம் தொழில் வளத்தில் வடநாட்டு மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துவிட்டது. அவரின் ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சியின் பகுதி...

பெரும் தொழில்கள்:
1. நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2. பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை (I.C.F)
3. திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் (BHEL)
4. ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை (HPL)
5. ஆவடி கனரக (டாங்க்)  தொழிற்சாலை
6. கல்பாக்கம் அணுமின் நிலையம்
7. கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை
8. சங்ககிரி துர்கம் இந்தியா சிமெண்ட்ஸ்
9. மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10. கிண்டி அறுவை சிகிச்சை கருவித் தொழிற்சாலை
11. துப்பாக்கி தொழிற்சாலை
12. நெய்வேலி  நிலக்கரி சுரங்கம்
13. சேலம் இருப்பு உருக்காலை
14. பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை
15. அரக்கோணம் இலகுரக ஸ்டீல்பிளாண்ட் தொழிற்சாலை

விவசாயம் சார்ந்த தொழில்கள்:
1. காமராஜர் பொறுப்பேற்றபோது (1953) தமிழகத்தில் புகலூர், நெல்லிக்குப்பம், பாண்டியராஜபுரம் ஆகிய 3 சர்கரை ஆலைகள் இயங்கி வந்தது. 1963-ல் மொத்தம் 14 சர்கரை ஆலைகளாக உயர்ந்தது.
2. திருச்சியில் 20 லட்சம் சக்தி கொண்ட எரிசாராய உற்பத்தி தொழிற்சாலை துவக்கப்பட்டது.

பிற தொழில்கள்:
நூல் நூற்பு ஆலைகள் (159)
துணிநூற்பு பாவுகள் (Looms) (8000)
4 மிதிவண்டி தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலை
2 சோடா உற்பத்தி தொழிற்சாலை
21 தோல் பதனிடும் தொழிற்சாலை
ரப்பர் தொழிற்சாலை
காகித உற்பத்தி ஆலை
அலுமினிய உற்பத்தி ஆலை

தொழிற் பேட்டைகள்:
1. கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 19 தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டன.
2. இது தவிர திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், தேனி, நாகர் கோயில், கும்பகோணம் மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் துவங்க காமராஜர் அரசு முயற்சி மேற்கொண்டது.
3. மேலும் சென்னை, நெய்வேலி, தூத்துக்குடி, சேலம், கோவை, பொள்ளாச்சி, திருச்சி ஆகிய இடங்களில் தொழிற் குழுமங்கள் அமைக்கப்பட்டன.


இன்னும் சில விசயங்கள் அடுத்த பதிப்பில்....!



புதன், 12 ஜூன், 2013

குடியாண்மை

இந்தியாவின் ஒட்டுமொத்த குடிமக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விசயம் -2014 நாடாளுமன்றத்தேர்தல்!

காங்கிரஸ் கட்சியின் ஊழல் ஆட்சி மக்கள் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.எனவே ஆட்சி மாற்றத்திற்கு பா.ஜ.க வை விட்டால் வேறு கதி ஏது  என்ற நிலைப்பாடு ஏற்பட்டபோதும் இந்து சமய கட்சியாகவே தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் பா.ஜ.க வும் அதன் தலைவர் அத்வானியும் மக்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போனது வேதனையான விசயம்தான்!இருப்பினும் பா.ஜ.க வின் நம்பிக்கை நட்சத்திரமாக மக்கள் மனதில் விழுந்தவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி!இவர் போல் நம் மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர் வேண்டும் என்று ஆரம்பித்து மோடியே நம் பிரதமர் ஆனால் எப்படி இருக்கும் என்று அனைவரையும் கனவில் மிதக்க வைத்தவர் மோடி!தொடர்ந்து 4 முறை முதலமைச்சர் என்ற ஒன்றே போதும் இவர் ஆட்சியை பறைசாற்ற!ஆனால் கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்க மோடி பிரதமராவது சாத்தியமா என்ன?அதிலும் 85 வயதிலும் போட்டியில் முன்னிலை வகிக்கும் அத்வானிதான் விட்டுத் தருவாரா?தன் கருத்தை மீறி மோடிக்கு 'தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவர்' பதவியை அளித்து விட்டார்கள் என்று தன்னுடைய பதவிகளை துறந்து கட்சியை விட்டு வெளியேறும் அத்வானியை என்னவென்று நினைப்பது?அத்வானியின் ராஜினாமா கடிதம் முதல் முறை நிகழ்வது அல்ல-"நான் சொல்வதை கேட்காவிட்டால் சாப்பிடமாட்டேன்" என்று அடம்பிடிக்கும் குழந்தையின் மிரட்டல்.தன்னுடைய ராஜினாமா கடிதத்தில் "நாட்டின் நலனில் அக்கறை செலுத்துவதற்கு பதில் சிலர் தன சுய விருப்பங்களுக்காக கட்சியை பயன்படுத்துகின்றனர்" என்று கூறியிருப்பதை அவரும் படித்துவிட்டுதானே  அனுப்பியிருப்பார்?மேலும் தன்னுடைய வலைதளத்தில் 'அம்பு படுக்கையில் தன மரணத்திற்கு காத்திருக்கும் பிதாமகரின் நிலை'யை தன்னுடன் ஒப்பிட்டுக் கொள்ளும் திரு.அத்வானி அவர்கள் அதே பீஷ்மர் தந்தையின் மகிழ்ச்சிக்காய் தன் அரசுரிமையை விட்டுத்தந்து சிற்றன்னையின் புதல்வரை அரியனையிலமர்த்தி வழி நடத்திய விதத்தையும் படித்திருப்பார்தானே?!



வெள்ளி, 22 மார்ச், 2013

மென்மையான 'குடி'மகன்கள் கவனிக்க!!

விஜய் டிவி-ல்  ஒரு நிகழ்ச்சியில்  குடிப்பழக்கத்தால் தனிமனிதனில் ஏற்படும் மாற்றம் அதனால் சமூகத்தில் நிகழும் அவலங்களைப் பற்றிய அலசல் நடைபெற்றது.அதில் கலந்துரையாடப்பட்ட பல விசயங்கள்  அதிர்ச்சிகரமானவையாகவே இருந்தன.பெரும்பாலும் நாம் அனைவருமே குடிப்பழக்கம் என்றால் குடித்துவிட்டு மனைவியை அடிக்கும் கணவன்மார்களையோ,சாலையோரத்தில் நெகிழ்ந்த ஆடைகளோடு மயக்க நிலையிலிருக்கும் 'மொடா குடிமகன்களையோ'  நினைத்துக் கொள்கிறோம்! அதாவது குடிக்கும்  நமக்கும் தொடர்பில்லாதது போலவே காட்டிக்கொள்கிறோம்.உண்மையில் மொடாக் குடிமகன்கள் சுமார் 5 முதல் 10 சதவிகிதத்தினரே!ஆனால் இன்று corporate world என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் பல பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளே நம் நாட்டில் பல குடிமகன்(ள்)களை  உருவாக்குகிறது என்பதே கசப்பான உண்மை!1930-களில் சராசரியாக ஒரு ஆண் மகன் 27 வயதில் மதுவுக்கு அறிமுகமானான்.இன்று குடிப்பழக்கம் ஆரம்பிக்கும் சராசரி வயது 20 என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.12.7% பேர் பள்ளிபருவத்திலேயே மதுப்பழக்கத்தை ஆரம்பித்து விடுகின்றனராம்!1990-களில் ஆண்டுக்கு 3 கோடியாக இருந்த TASMAC-ன் வருமானம் இன்று 18 கோடியாக  உயர்ந்துள்ளது எதைக் குறிக்கிறது?   20 அல்லது 21 வயதிலேயே  ஐந்து இலக்க எண்ணில் வருமானம் தரும் பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்பால் இரவு நேர விருந்து என்ற கலாச்சாரம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகி விட்டது.எனவே மதுவும் மிக சுலபமாகிவிட்டது.மது அருந்துவதால் நினைத்ததை பேசுவதற்கான தயக்கம் விலகுகிறது;உயர் அதிகாரிகளுடன் இணக்கமாக பேச முடிகிறது;அலுவலக வேலைச் சுமையால் ஏற்படும் மன அழுத்தம் குறைகிறது இப்படி பல காரணங்களைக் கூறிக் கொண்டு தங்களை social drinker என்று அடையாளப்படுத்துகின்றனர் நம் குடிமகன்கள்;அதாவது தாங்கள் 'மென்மையான குடிமகன்கள்';சாலையோரம் புரளும் ரகம் அல்ல என்று அங்கீகாரம் தேடுகின்றனர்.மென்மையான குடிப்பழக்கம் தவறில்லை என்று கொள்கைப் பிரச்சாரம் செய்து கொள்கின்றனர்.ஆனால் இங்குதான் ஆபத்து ஆரம்பிக்கிறது.ஆரம்பத்தில் இந்த   மென்மையான  குடிமகன்கள் குறைந்த அளவிலேயே மது அருந்தினாலும் மன அழுத்தம் மிகும் காலம்,அதிகமாக சம்பாதிக்கும் போது  என்று குடிப்பதற்கான காரணங்களை அதிகப்படுத்துகின்றனர்.பின் தங்களை அறியாமலே மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்.ஆனால் தான் மிகுந்த கட்டுபாட்டில் இருப்பதாகவும் தான் நினைத்தால் சுலபமாக விட்டுவிட முடியும் என்றும் ஆழமாக கருதுவதால் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மது அருந்தினால் கூட 'நான் அளவுக்கதிகமாக மது அருந்துவது கிடையாது' என்றே நம்புகின்றனர்.மது அருந்துவதால் தற்காலிக தைரியம் பிறந்தாலும் காலப்போக்கில் அடுத்தவர் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்து விடுகிறது.உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் மதுவின் தீமைகள் பற்றி அறிந்திருந்தும் நம் சமூகம் வேகவேகமாக அழிவுப்பாதையையேத் தேடி போய் கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனையான விசயம்.

Corporate சகாக்கள் விழித்துக் கொள்வார்களா??!!