வியாழன், 21 பிப்ரவரி, 2013

"தோன்றின் புகழோடு தோன்றுக!"

நாம் முதலில் கூறியத்  தேடல்களை விட ஒவ்வொரு மனிதனிடமும் புகழ் தேடும் போதை சற்று அதிகமாகவே இருக்கிறது.தன்னைப் பிறரிடமிருந்து தனித்துக் காட்டுவதற்காய் ;தனக்கென ஓர் அடையாளமாய் எப்போது பெயரை சூட்டிக் கொள்ள ஆரம்பித்தானோ,அன்றிலிருந்தே தன்னை அங்கீகரிக்கும் புகழையும் தேட ஆரம்பித்து விட்டான்!
        ஒருவருக்கு மனம் பதைத்து  உதவி செய்தாலும் பின் கிடைக்கும் நல்லப்  பெயரில் மனம் மகிழ்ச்சி கொள்ளவே செய்கிறது:சில நேரங்களில் கிடைக்கும் நல்லப்  பெயரே கூட உதவி செய்ய உந்துதலாகிறது.இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு அறிவுரைக் கூற வேண்டுமானால் கூட நாம் அதற்கு தகுதி உடையவராக அதாவது நல்லப் புகழ் உள்ளவராக இருக்க வேண்டும் ;இல்லையென்றால் நம்மை மதிப்பார் ஒருவரும் இல்லை!
இதைதான் வள்ளுவரும்,

"தோன்றின் புகழோடு தோன்றுக!"     என்கிறார்.

ஒருவன் எவ்வளவுதான் படித்துப் பெரிய பதவியில் இருந்தாலும்,அப்பதவியால் அவன் பிறருக்கு உதவாமல் போகும்கால் ஒருவரும் அவனுடைய புகழ் பாட போவதில்லை!அழிந்து போகக் கூடிய புகழை ஈட்டுவதற்கு பல வழிகள் உள்ளன.அழகான முகத்தோற்றத்தின் மூலம்;அழகிய ஆடைகளின் மூலம்;நீளமான சிகை அலங்காரத்தின் மூலம்;தான் வகிக்கும் பதவியின் மூலம்;அதீத பொருள் செல்வத்தின் மூலம்;நல்ல விளையாட்டு வீரனாவதன் மூலம்;எளிமையான வாழ்க்கையின் மூலம்;இனிமையாக பேசுவதன் மூலம்;குழந்தைகளின் மூலம்;பெற்றோரின் மூலம்....இப்படி ஏதேனும் ஒரு வழியினால் புகழ் அடைந்ததாக நீங்கள் கருதலாம்.ஆனால் இவையாவும் பெயர் அதாவது தனிபட்ட மனிதனுக்கான அடையாளமேத் தவிர நிலைத்த புகழ் அல்ல:காரணம் இவையாவும் மறையக்கூடியது.ஆனால் உண்மையில் புகழ் என்பது அழியக்கூடியது அல்ல;நாம் இறந்த பின்னும் இவ்வுலகில் நிலைத்து வாழக் கூடியது!

காந்தியடிகள் மிகப்பெரும்  செல்வந்தராய் மட்டும் வாழ்ந்திருந்தால் அவர் பெயர் இன்று யாருக்கும் தெரிந்திருக்கப் போவதில்லை.வறியவர்களின் துன்பத்தில் மனம் வாடியதாலும்,இந்தியாவின் அடிமைத்தனத்தை வேரறுத்ததாலும், அகிம்சையை போதித்தாலும்,சுயக்கட்டுப்பாட்டைக் கடைபிடித்ததாலும் அவருடைய உடல் அழிந்தாலும் அவருடைய புகழ் இன்றளவும் நிலைத்திருக்கிறது.

சரி நாமும் அழியாப் புகழை எப்படிப் பெறுவது...?

பிறருக்கு உதவி செய்வதன் மூலம் மட்டுமே ஒருவனுக்கு அழியாப் புகழ் உண்டாகும்.பிறருக்கு உதவி என்பது வறியவனுக்கு ஒருநாள் ஒருவேளை பசியாற்றும் செயல் கூட போதுமானது.இதன் மூலம் என்ன புகழ் கிடைத்து விட போகிறது என்கிறீர்களா?ஒரே ஒருநாள் செய்து பாருங்கள்;கிடைக்கும் மன நிறைவில் அடிக்கடி செய்யத் தூண்டும்.பின் அதுவே உங்கள் அடையாளமாகி விடவும் கூடும்.சிறிய உதவியாயினும் அதைப் பெற்றுக் கொள்பவர்க்கே அதன் ஆழம் புரியும்.

இத்தகைய புகழைத் தேடும் நோக்கில் ஏதேனும் ஒரு உதவியை செய்து விட்டு தன்னைத் தானே  விளம்பரப்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளாக
வேண்டாம்.அப்படி வரும் புகழும் நிலையானதல்ல;அன்றைய தினத்தைத் தவிர வேறு நாட்களில் யாருமே அதை நினைவுக்கூரவும்  போவதில்லை.

அழிவில்லா செல்வமான புகழை அனைவரும் விரும்புவோமாக!!