ஞாயிறு, 8 டிசம்பர், 2013

உன்னைப் போல் ஒருவன் !

ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸை விட பெரும்பான்மை!-இதை கேட்டதும் முதலில் எனக்கு ஆச்சரியம்தான்!கேஜ்ரிவாலைப் பற்றி அதிக அபிப்ராயம் ஏற்பட்டதில்லை காரணம் அவர் அன்னா ஹசாரேவின் செயல்பாட்டுக் குழுவிலிருந்து வெளியே வந்தவர்;ஹசாரேயின் போராட்டங்கள் நிகழ்த்திய எழுச்சி சில மாதங்களிலேயே பிசுபிசுக்கத் தொடங்கிய காரணமும் புரியாததால் அவரிடமிருந்து வெளிவந்த கேஜ்ரிவால் மீதும் எந்த தாக்கமும் என் மனதில் ஏற்பட்டதில்லை! 'ஹசாரேயை விட்டு விலகல்;அரசியல் பிரவேசம்' என்ற தொடர்ந்த ஊடக வெளிச்சத்தில் இருந்ததாலும் நன்மதிப்பு ஏற்படாதிருந்திருக்கலாம்!ஊழலற்ற அரசு என்பது நம் எல்லோருடைய கனவாக இருந்தாலும் அது ஒன்றை மட்டுமே வலியுறுத்துவதில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு விளையப் போகும் நன்மை என்னவாக இருக்க முடியும்?
   டெல்லியில் பா.ஜ.க ஆட்சி அமைத்தாலும்,வலுவான எதிர்க்கட்சி நிலையில் ஆம் ஆத்மி!இன்று கேஜ்ரிவாலின் பேட்டியைப் பார்த்தபோது மிக வித்தியாசமாக தெரிந்தார். " டெல்லி முழுமைக்கும் ஒரே விதமான வாக்குறுதிகளைக் கூறுவதன் மூலம் எல்லாத் தரப்பினருக்கும் தேவையானது கிடைக்கப் போவதில்லை.எனவே 70 தொகுதிகளுக்கும் 70 விதமான பட்டியல் தயாரித்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்"-இதுதான் அவருடைய எளிமையான ஆனால் மிகச்சரியான வார்த்தைகளாக இருந்தது.தேவையைத் தவிர தேவையற்றவைகள்தான் இன்று நமக்கு அதிகமாகக் கிடைக்கின்றன.எனவே அத்தியாவசத்தின் முக்கியத்துவத்தை நோக்கி மக்களை நகர்த்தும் இந்தக் குடிமகன் சிறந்த தலைவனாக மனமார வாழ்த்துவோம்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக