வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

கண்ணோட்டம்

"தனிமனிதனுக்கு உணவில்லையெனில்..."
பாரதியின் கருணைக் கவிதையை
கொலைவெறியில் பேசும்
கறை வேட்டிக்காரர்களே!

வீதியில் அரங்கேறும்
பிறிதொரு உயிர்படும்
வேதனையைக் கண்டும்
காணாமல் போகும் குருடர்களே!

நான் அஹிம்சாவாதி
எனக்கூறிக் கொண்டு பிறர்
மனத்தைக் கொத்திக் காயப்படுத்தும் பருந்துகளே!

வஞ்சத்தைத் தீர்க்கவோ
தன்வயிறு நிறைக்கவோ
பிறர் உயிர் தின்னும் மாமிசப் பட்சிகளே!

என்றேனும் கருணையுடன் நினைத்திருப்பீரா...?

உயிர்ப்பிச்சைக் கேட்டும்
கிடைக்காது போன வெற்றிவேலனை...
மதத்தீயில் கருகிய உயிர்களை...
அநாதையாக்கப்பட்ட பிஞ்சுகளை...
சமாதியாய், அகதியாய் மாறிப்போன உறவுகளை...
சுனாமி சுருட்டிய சொந்தங்களை...
தீவிரவாதத்தில் செத்து மடியும் பந்துக்களை...
நிலநடுக்கத்தால் சுயநினைவற்ற பிறந்த குழந்தையை...

இல்லையெனில்...

வீதியில் உறங்கும் குளிரில் விறைத்த
உடலுக்கு- ஒரு போர்வையாவது
அளித்துப் பார்!
உன் கண்ணோட்டம் மாறும்.
வள்ளுவனின் 'கண்ணோட்டமும்' சிறக்கும்!!

திங்கள், 15 பிப்ரவரி, 2010

காதலில் முழுமை...

அன்பு மனைவிக்கு,

உணர்வுப் பகிர்தலுக்காக ஏங்கும்
உன்னவன் எழுதுவது.

மறக்க முடியாத சில தருணங்கள்
மனதில் நிழலாடுகிறது...
பகிர்ந்து கொள்ள வேண்டும்
போல் இருக்கிறது
பாசிபடிந்த பழையவைகளை...

உன் இயல்புகளைப் பற்றி
இம்மியளவும் அறிந்திருக்கவில்லை...
அறிய முற்படவும் இல்லை...
ஒன்று மட்டும் அறிந்திருந்தேன்
உன் விருப்பங்களை கருக்கி,
என் விருப்பங்களை
குளிர்காயச் செய்தாய்...

என் மீதான உன் புரிதல்
எந்த நிலையிலும் தோற்றதில்லை.
நான் அடிக்கடி தோற்றேன்
என் மீது நீகொண்ட
அன்பின் வெற்றியால்...

நம் மகளின்
முதல் அழுகுரலை விட
அதற்கான உன் அழுகை நீரை
நேசித்தேன்...

பேசவேண்டிய சில தருணங்களில்
நான் மௌனித்திருந்த நிமிடங்கள் பல...
மன்னித்தருளினாய்
புள்ளிகளை பூகம்பங்கள் ஆக்காது!
வெளிப்படுத்தாத என் வார்த்தைகளின்
வெளிப்படையான அர்த்தங்களை
நீ நன்றாகவே அறிந்திருந்தாய்...

இயன்றவரை உன்னை விரும்பினேன்
இன்றுவரை இயலவில்லை
அதனை வெளிப்படுத்த...

மாறாதக் காதல் தேவதையே...
உன்னிடம் நிறைய பேசவேண்டும்,
நிகழ்ந்தவைகளைப் பற்றி,
நிகழாதவைகளைப் பற்றி,
நிஜங்களைப் பற்றி,
நம் நேசத்தைப் பற்றியும்!

பகிர்ந்து கொள்ளத் தவறிய
பழைய நினைவலைகளில்
நாம் கால் நனைக்க வேண்டும்...

குழந்தை எனக் கைப்பற்றிக் கொள்கிறேன்
கூட்டிச் செல் எங்கேயாவது...