திங்கள், 27 ஜூன், 2011

அதிகாரம் தேடல் !

பணத்தைத் தேடும் பெரும்பாலான மனிதர்களின் தேடல் இது!பணத்தின் வலிமையால்,பணத்தின் அதிகாரத்தால் வீடு வாங்கலாம்;மனிதர்களை வாங்கலாம்;அதிகாரிகளை வாங்கலாம்;அமைச்சர்களை வாங்கலாம் என்று நினைக்கும் மனிதர்கள் அதன் மூலம் அடுத்தவர்களின் மேல் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள்.

மனிதனை மனிதன் அடிமைப்படுத்த நினைக்கும் போது அதிகாரத்தை கையிலெடுக்க நினைக்கிறான்.மாறாக மனிதனை மனிதன் மதிக்கும் இடத்தில் இருவரிடமும் பரஸ்பர அன்பு மட்டுமே காணப்படும்.

சரி...அலுவலகத்தில் பதவி உயர்வுக்காகப் போராடும் சாதாரண மனிதர்களாகிய நாம் பதவி மூலம் கிடைக்கும் அதிகப் படியான பணத்தை விரும்புகிறோமா? அல்லது பதவியின் அதிகாரத்தை விரும்புகிறோமா?

இரண்டும்தான்!

இந்த இடத்தில்தான் நமக்கு ஒருவித புரிதல் வேண்டும்.அதாவது பதவி உயர்வு மூலம் கிடைப்பது தலைமையேத் தவிர அதிகாரம் அல்ல.நம்மில் பலரும் தலைமைப் பண்பிற்கும் அதிகாரத்திற்கும் உள்ள இடைவெளியில் சிக்கித் தவிக்கிறோம்.

மேலே தலைமை என்று ஒன்று இருக்கிறதா ? யாருமே அறிந்ததில்லை.ஆனால் இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு உயிர்க்கும் அந்தத் தலைமை விநியோகிக்கப்பட்டு ஒவ்வொன்றும் அதனதன் வேலையை சரியாக செய்கிறது.

தலைமைக்கும் அதிகாரத்திற்கும் அப்படி என்னதான் வேறுபாடு?

தலைமை அதன் அடக்கத்தை மறக்கும்போது அது அதிகாரமாகிறது.ஆம்! தலைவன் என்பவன் உணர்வு கடந்த அடக்கம் கொண்டவனாக, எளிமையானவனாக இருக்க வேண்டும்.உணர்வு கடந்த அடக்கம் என்பது கோபம்,பொறாமை,அதிருப்தி,சுயநலம்,வெறுப்பு,வீம்பு போன்ற எதிர்மறை உணர்வுகளை கடந்த அமைதி என்ற இனிமை!எந்த ஒரு மனிதன் தன்னை எதிரியாக நினைப்பவர்களை பழிவாங்கும் எண்ணமில்லாது சந்திக்கிறானோ அவனே சரியான தலைமைப் பண்புள்ளவன்.மாறாக "நீ என்னை இப்படி பேசிவிட்டாயா? நான் என்ன செய்கிறேன் பார் " என்று நினைக்கும்போது ஏதாவது செய்து தன் எதிரியை தன் காலில் விழ வைக்கிறான்.

தன் வீரத்தை அடுத்தவர்களிடம் பிரகடனப் படுத்த முயலும்போது ஆதிக்கம் அல்லது அதிகாரமே பிறக்கிறது.வீரத்தின் உள்நோக்கம் ஆணவம்;அதன் வெளிப்பாடு வன்முறை.ஆனால் வீரத்தைக் கடந்த வீரம் எது தெரியுமா? கருணை!!

இதைதான் வள்ளலார்,
"அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி " என்றார்.

பாரதியாரும் ,
"பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே..." என்று பாடினார்.

தன்னுடைய வீரத்தை பறைசாற்ற அடுத்தவனுடைய திறமையைத் தாழ்த்துவதும்,அவனுடைய வலிமையை தாழ்த்துவதும் கூட அதிகாரத்தின் வெளிப்பாடே!அதனால்தான் தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிச் செயலைக் கண்ட காந்தியடிகள்,

"எப்படிப் பிறரைத் தாழ்த்துவதன் மூலம் மற்றவன் உயர முடியும் என்று எனக்கு புரியவில்லை " என்றார்.
ஆம்!
வலிமைக்கு பதில் மென்மைதான்!
கோபத்துக்கு பதில் அன்புதான்!
பகைமைக்கு பதில் உறவுதான்!
அதிகாரத்துக்கு பதில் எளிமைதான்!

உயர்ந்த பண்புள்ளவர்கள் அதிகாரத்தை கையிலெடுப்பதில்லை;அது அவர்களிடம் இருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள்;அவர்கள் தங்களைப் பற்றி பிறர் புகழ்பாட வேண்டுமென விரும்புவதில்லை; போகுமிடங்களிலெல்லாம் தன்னைப் பற்றிய சுவரொட்டிகளை எதிர்பார்ப்பதில்லைமக்கள் தன்னை பெரிய மனிதனாக நினைக்க வேண்டும் என்று நினைப்பதில்லை ; மக்களை தன்னையே நம்பியிருக்க வைப்பதில்லை.அதிகாரமற்ற தலைவனுக்கு உதாரணமாக அமெரிக்காவின் ரூஸ்வெல்ட்டைக் கூறலாம்.

1930- களில் அமெரிக்காவில் பஞ்சம் வந்தது.அப்போது அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் அரசாங்கப் பணத்தை எடுத்து மக்களை நிறைய சாலைகள் அமைக்கச் செய்தார்.அதில் கிடைத்த பணத்தில் மக்களின் பசியும்,பஞ்சமும் தீர்ந்தது.

ரூஸ்வெல்ட் ஒரு சர்வாதிகாரியாகதானே செயல்பட்டார் என்று தோன்றலாம்.உண்மைதான்!ஆனால் தன் நாட்டு மக்களுக்கு அல்ல.

ரூஸ்வெல்ட் நினைத்திருந்தால் மக்களுக்கு இனாமாக பணத்தைக் கொடுத்திருக்கலாம்.மாறாக அவர் மக்களுடைய சுயகௌரவத்தைக் கெடுக்காத விதம் அவர்களை உழைக்கச் செய்தார்.

இங்கு ரூஸ்வெல்ட் ஒரு கல்லில் இரு மாங்காய்கள் அல்லவா அடித்திருக்கிறார்.அதிகாரத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?மக்கள் தன்னையே நம்பியிருந்தால்தான் தான் சொல்வதைக் கேட்பார்கள் என்று அவர் நினைக்கவில்லை.மக்களை "நாங்கள்தான் செய்தோம்" என்று சொல்ல வைத்தார்.இதுதான் தலைமையின் சரியான அணுகுமுறை.

நம் ஊரில் என்ன நடக்கிறது?நம் தலைவர்கள் தேர்தலில் வெற்றியடைய தங்களுக்கு வாக்களிக்க மக்களுக்கு பணம்;வெற்றியடைந்த பின் "நாங்கள்தான் மக்களுக்கு செய்தோம்" என்றப் பிரகடனம்.இப்படி கொடுத்து கொடுத்து மக்களை அதிகமாக எதிர்பார்க்க வைத்து விட்டனர்.மக்களும் தங்களின் 'வரிப் பணத்தால்தான் அரசாங்கம்' என்ற உண்மையை மறந்து 'அரசாங்கத்தின் பணம் நமக்கே ' என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.எனவேதான் மழை பெய்தால் நிவாரணம் ;காற்றடித்தால் நிவாரணம் ;தீபாவளி,பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை என்ற நிலைக்கு தள்ளப் பட்டுவிட்டனர்.

தலைவன் என்பவன் வழிகாட்ட வேண்டும்;ஆள்பவனாக அல்ல.அதேபோல் தலைவன் தன்னை முன்னிறுத்திப் பிரகடனப் படுத்துபவனாக இருக்கக் கூடாது. 'கடமையை செய்;பலனை எதிர்பாராதே' என்கிறது பகவத்கீதை.அதாவது உன்னுடைய கடமைக்குதான் நீ அதிகாரி. அதன் பலனுக்கு அல்ல.கடமையை மட்டும் செய்,அத்துடன் நிறுத்திக் கொள்;அதன் பலனுக்கு உரிமைக் கொண்டாடாதே.ஒரு காரியம் சரியாக நடந்து முடிவதில் எத்தனையோ விஷயங்கள் , சிறுசிறு செயல்கள் இருக்கின்றன. அவையெல்லாம் ஒன்று சேர்ந்து , இணைந்து, அவையவை தன் காரியத்தை செய்யும் போதுதான் அந்த காரியம் நிறைவேறுகிறது.ஓரளவுதான் உன் வேலை; அதனால் முழுப்பலன் மேல் உரிமைக் கொண்டாடுவது தர்மம் அல்ல.

ஆனால் மனிதராய் பிறந்த அனைத்து உயிர்களுக்குமே தான் ஒரு காரியம் செய்துவிட்டால் அதைப் பற்றி பிறர் ஓரிரு வார்த்தைகளாவது புகழ்ந்து கூறுவதைக் கேட்டால்தான் மன அமைதி கிடைக்கிறது.

புகழைத் தேடும் மனிதர்களின் மனோபாவம் பற்றி அடுத்தக் கட்டுரையில்!

வியாழன், 23 ஜூன், 2011

செல்வம் தேடல்

பணம்!
இது இந்த உலகில் வாழத் தேவையான ஒன்று.
அது இல்லாதவன் பிணம்!

'கல்லறைக்கு போகும் வரை சில்லறை தேவை' என்று வேடிக்கையாய் கூறுவதும் உண்டு.உலகில் மிகக் கொடியது வறுமை.

"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றார் மகாகவி.

"இடும்பைகூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது" என்ற ஔவையின் வறுமை புலம்பலோ நம் உள்ளத்தையே உலுக்கும்.

சிறிது பணம் இல்லாது போயின், அந்த கொடுமையில் உயிர் கூட பிரியலாம்.ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பர்.ஆம்!ஏழைக்கு இவ்வுலகில் எதுவுமே இல்லை.

அருள் பற்றிப் பேசிட வந்த வள்ளுவர் பொருள் பற்றிப் பேசியதையும் பாருங்கள்....

"அருள்இல்லார்க்(கு) அவ்வுலகம் இல்லை;பொருள்இல்லார்க்(கு)
இவ்வுலகம் இல்லாகி யாங்கு ".


ஆம்!பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகமே இல்லை.


அடிப்படைத் தேவைகள் பூர்த்தி ஆனதும் மனிதனுக்கு மனத்தேவைகள் ஆரம்பமாகின்றன.தன்னை உலகம் கண்டுகொள்ள வேண்டும்;பாராட்ட வேண்டும் என நினைக்கிறான்.

ஒரு சமயம் முல்லா நசுருதீன், 'அடுத்த தெருவில் விருந்து நடக்கிறது' என்ற வதந்தியை . கேட்டவர்களெல்லாம் அங்கே ஒடத்துவங்கினார்கள்.சிறிது நேரம் கழித்து எல்லோரும் ஓடுவதைப் பார்த்த முல்லா,'ஏதோ விஷயமிருக்கிறது' என்று தானும் ஓட ஆரம்பித்தார்.

கதை இதுதான்!

எங்கே ஓடுகிறோம்,ஏன் ஓடுகிறோம் என்பதைப் பற்றி நினைத்து பார்க்காமலே மனிதன் ஓடுகிறான்;வாழ்நாள் முழுதும் ஓடிக்கொண்டிருக்கிறான்.பெயருக்கும்,புகழுக்கும் ஆசைப்பட்டு ஓடுகிறான்;பணத்துக்கும்,பதவிக்கும் ஆசைப்பட்டு எதையும் செய்யத் தயாராகிறான்.

மனித வாழ்வில் தேவை என்ற அடிப்படையையும் , ஆசையையும் இணைத்து ஒரு கொடு வரைந்து,அதில் தேவைக்கு அருகிலோ அல்லது ஆசைக்கு அருகிலோ ஒரு குறுக்குக்கோடு போட்டு நம் ஆசைக்கு ஓர் எல்லை கட்ட வேண்டும்.இல்லையென்றால் நாம் ஆசையின் பின்னால் ஆயுள்பூராவும் ஓடிக்கொண்டிருப்போம்.சுவையாக இருக்கிறது என்பதற்காக தேவைக்கு மேல் சாப்பிட்டால் என்ன ஆகும்?அஜீரணம்,வயிற்று வலி!அதுபோலதான் பேராசை அநாவசிய செலவுகளில் முடிகிறது.

அதற்காக ஆசையில்லா மனிதன் என்று இவ்வுலகில் எவரும் இல்லை.ஆசை பிறக்கும்போது அங்கு தேவையும்,தேடலும் பிறக்கிறது.எந்த குறிக்கோளும் இல்லாது அடுத்தவரிடம் கையேந்தி பிழைப்பவரிடம் சில்லறைக் காசு அளவிலான செல்வத்தேடல்;அன்றாட உணவுத் தேவையை மட்டும் பூர்த்தி செய்து வாழும் மனிதரிடம்,உறங்குவதற்கு ஓர் இடம் என்ற அளவில் செல்வத்தேடல்;உணவு ,உறைவிடம் கிடைத்தபின் உடுத்திக்கொள்ள இரு நல்ல ஆடைகளுக்கான தேடல்;அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் சக்தியுள்ள மனிதனுக்கு குழந்தைகளின் கல்வி,எதிர்காலத்திற்கான செல்வத்தேடல்;இவை எல்லாவற்றிற்கும் வசதி உள்ள மனிதனுக்கு செல்வத்தின் மீதான செல்வத்தேடல்;அடுத்தவர்கள் இப்படி இருக்கிறார்கள் நாமும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சமூகத்திற்காக தங்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் மனிதர்களின் செல்வத்தேடல்.

பொருளாதாரத்தில் கடைநிலையிலிருக்கும் மனிதனுக்கு உயர்நிலை போகும்வரை தேடலுக்கான முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.ஆனால் உயர்நிலை அடைந்த பிறகோ நாட்டின் அல்லது உலக பணக்கார வரிசையில் இடம்பிடிக்கும் பொருட்டு தேடல் தொடர்கிறது.இப்படி பொருளாதாரத்தில் கீழ்நிலையிலிருந்தாலும், உயர்நிலையிலிருந்தாலும் இந்த செல்வத்தை தேடும் மனிதர்களின் மனோபாவம் மேலும் தேடல் மட்டுமே.

அப்படி நாட்டின் அல்லது உலகப் பணக்காரர்கள் வரிசையிலிருக்கும் மனிதர்களோ சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பவசம் போன்ற கூறுகளால் மேலும் செல்வம் தேட வேண்டிய கட்டாயத்திலிருக்கின்றனர்.உதாரணத்திற்கு பங்குவர்த்தகத்தில் கைதேர்ந்த வல்லுநரான வாரன் பபெட்டை (warren buffett)
எடுத்துக் கொள்வோம். வயதான அவரால் 'இருக்கும் சம்பாத்தியம்' போதும் என்று தன்னுடைய வர்த்தகத்தை கைவிட முடியாது:காரணம்,அவர் தன்னிடம் முதலீடு செய்துள்ள பங்குதாரர்களுக்கு லாபம் சம்பாதித்து தர வேண்டிய கட்டாயம்;தன்னால் வேலை வாய்ப்பளிக்கப்பட்டவர்களை கைவிட முடியாத சூழ்நிலை!இப்படி பிறர்க்கான வாழ்க்கையும் கூட தேடலுக்கு முக்கியமான காரணகர்த்தாவோ?!

பழங்காலத்தில் இந்த செல்வத்தேடல்களே கிடையாது;இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்ந்தனர் என்று கூறிவிட முடியாது!
மதத்தின் பெயரால் வழிபாட்டு முறைகளை உருவாக்கி,கடவுள் சிலைகளை தங்கள் விருப்பத்தின்படி வடிவமைத்த நம் முன்னோர்கள் செல்வம் சேர,கடன்சுமை குறைய என்று செல்வத்தேடலை கடவுளிடமிருந்தே ஆரம்பித்து வைத்தனர்.

ஒழுக்கத்தை உபதேசிக்க வந்த காப்பியமான சிலப்பதிகாரத்தில் காப்பியத்தலைவன் கோவலன் தன மனையாள் கண்ணகியுடன் பொருள் தேடி மதுரை சென்றதும் ; இதிகாசமான ராமாயணத்தில் குபேரனின் செல்வங்களை ராவணன் அபகரித்ததும்,பின் அதனை மீட்க குபேரன் போராடியதும் ;மற்றும் மகாபாரதத்தில் துரியன் பாண்டவர்களின் நாட்டை தன வசப்படுத்திக் கொண்டதும் என்று செல்வத்தேடல்கள் ஒவ்வொரு நூல்களிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளதிலிருந்தே ஆதியிலிருந்து மனிதனின் ஆசைகள் அதிகமாகிக் கொண்டே வருவதைப் புரிந்து கொள்ளலாம்.

மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் சந்தோசம் , நிம்மதி , மனநிறைவு இவைதான் தேவை.ஆனால் இவற்றை பணயம் வைத்து பணம்,பதவியை தேடி ஓடுகிறான்;புகழை நாடி பணம் தேடுகிறான்.

நாம் என்னதான் அதிக பணம் தேடுவது நிம்மதியை குலைக்கும் என்று கூறிக்கொண்டாலும்,உடலும் மனமும் சோர்வடையும்போது மட்டுமே மனிதன் செல்வம் தேடுதலை குறைக்கிறான் அல்லது விடுகிறான்.

ஒருவேளை மனிதன் போதுமான அளவுக்கு செல்வம் சேர்த்தப் பிறகு சோம்பேறியாகிவிடக் கூடாது என இந்தத் தேடலைத் தொடர்கிறானோ?அல்லது தேவையான செல்வத்தை சேர்த்தப் பிறகு ஒன்றும் செய்யாமலிருப்பதால் வாழ்க்கையின் சுவாரசியம் குன்றிவிடுமோ?உண்மைதான்!


தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்


செல்வத்தின் தேடல் அளவுகோல் 'ஆசை'!அந்த அளவுகோல் ஒவ்வொரு மனிதனின் கையிலும் வெவ்வேறு அளவுகளுடன் உள்ளது.இந்த அளவுகோல் மாறும் விதத்தால் ஒருவருடைய ஆசை மற்றவர்க்கு பேராசையாகவோ அல்லது அற்ப ஆசையாகவோ தோன்றுகிறது.உண்மையில் அவசியமான தேவைகளுக்கான செல்வம் தேடல்தான் நிம்மதி மற்றும் சந்தோசம் தரும்.அதை விடுத்து தேவைக்கதிகமான சொத்துக்களை சேர்ப்பதால் தன்னிடம் இருக்கும் எதோ ஒன்றை இழக்க நேரிடுகிறது;பின் அது நிம்மதியை நாடிச் செல்ல வைக்கிறது!

இப்படி செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கும் போதே மனிதனுக்கு மற்றொரு தேடலும் தொடங்கி விடுகிறது!அது என்ன என்றுதானே யோசிக்கிறீர்கள்?அதிகமான பணம் கைக்கு வந்துவிட்டால் வேறு என்ன செய்யத் தூண்டும்?

பதவியில் அமர மனமானது ஆசை கொள்ளும்!அடுத்தவர்களுக்கு நல்லது செய்வதற்காய் அல்ல; அடிமைப் படுத்துவதற்காக! தன் குலம் தழைக்க,அடுத்தவன் முதுகில் ஏறி பயணம் செய்யத் தூண்டும் அதிகாரத்தைத் தேடி மனமானது அலைபாயத் தொடங்கும்!

ஆம்!அடுத்தக் கட்டுரையில் அதிகாரத்தைத் தேடுதலைப் பற்றி!

செவ்வாய், 14 ஜூன், 2011

தேடித் தேடித் தொலைவோமா...???

பசிப்பிணித்தோனுக்கு ஒருவேளை சோறு


பணக்காரனுக்கு நிம்மதி


படித்தவனுக்கு திறமைக்கேற்ற வேலை


படிக்காதவனுக்கு வறுமைக்கேற்ற வேலை


தாழ்குலத்தோனுக்கு தனக்கும் அங்கீகாரம்


உயர்குலத்தோனுக்கு தனக்கான அங்கீகாரம்


குழந்தைக்கும் இளைஞனுக்கும் அனைத்துமே


முதியோருக்கு இறைவன் மட்டுமே!




இப்படி வாழ்வில் எல்லோரிடமும் தென்படுவது எதோ ஒன்றினைப் பற்றிய தேடல்!வாழ்வில் பிடிப்புள்ள எந்த ஒரு மனிதனும் தன்னை சுற்றி எதையோ தேடிக்கொண்டுதானிருக்கிறான். ஏன் வாழ்வில் பற்றற்றவர்கள் என்று சொல்லக்கூடிய முனிவர்களும்,சாமியார்களும் தன்னுள் உள்ள இறையை முழுமையாக உணரத் தேவையான ஞானத்தைத் தேடிதான் துறவியாகின்றனர்.தேடல் என்பது தன்னிடம் இல்லாததைத் தேடுவது மட்டுமல்ல;தன்னிடம் உணரப் படாதவற்றை தேடுவதும்தான்.


தேடலுக்கு 'எதிர்பார்ப்புடன் கூடிய உழைப்பு' என்றும் பொருள் கொள்ளலாம்.நாம் செய்யும் ஒவ்வொரு உழைப்பிலும் எதையாவது எதிர்பார்க்கிறோம்;நமக்கு தெரியாமலே ஒருவித எதிர்பார்ப்பு நம் முன்னே ஏற்பட்டுவிடுகிறது.நாம் ஒருவரிடம் அன்பு செலுத்தினால் அவரிடமிருந்து பதில் அன்பை எதிர்பார்க்கிறோம்.குழந்தைகளிடம் தன் ஆசைப்படி நடக்க எதிர்பார்க்கிறோம்.வேலை செய்யும் இடத்தில் கூடுதல் சம்பளம்,பதவி உயர்வு,மரியாதை,கௌரவம் என எதையோ எதிர்பார்க்கிறோம்.இப்படி அன்பைத் தேடி,அதிகாரத்தைத் தேடி,பணத்தைத் தேடி,பதவியைத் தேடி,இன்பத்தைத் தேடி,இறையைத் தேடி என்று நிறைய எதிர்பார்ப்புகளுக்கிடையே தேடல் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.இப்படி தேடல் எதிர்பார்ப்புகளுடனேத் தொடர்வதால் ஏமாற்றமும் ஏற்படுகிறது. ஏமாற்றத்தினால் தேடல் முடிந்து விடுவதில்லை.


தேடல் பற்று காரணமாகவும் தோன்றுகிறது.ஒரு விஷயத்தின் மேல் ஆசை அல்லது பற்று கொள்வோமேயானால் அதை அடையத் தேவையான வழித் தேடல் பிறக்கிறது.ஒருவன் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்து ஆசை கொள்வானேயானால்,அதை வாங்குவதற்கு தேவையான பணத்தைத் தேடி சம்பாதிக்கிறான்.ஒருவன் பிறர் தன்னை விரும்ப வேண்டும் என ,ஆசைக்கொள்கிறான் எனில்,அவர்களைக் கவர்வதற்குத் தேவையான உத்திகளைத் தேடுகிறான்.பொருள்,செல்வம்,விருப்பு,வெறுப்புகளை துறந்தவர்கள் இறைவன் மீது பற்றுக் கொண்டு இறைவனைத் தேடி செல்கின்றனர்.ஆனால் அந்த ஆசை பேராசையாக இல்லாமல் அவசியமானத் தேவைகளுக்கானதாய் இருக்க வேண்டும்.நமக்கு அன்றாடத் தேவையான உணவைத் தேடுகிறோம்;உடையைத் தேடுகிறோம்;இருப்பிடத்தைத் தேடுகிறோம்;வருங்கால நன்மைக்காக செல்வத்தைத் தேடுகிறோம்.இப்படி ஒருவனுக்கு தேவை ஏற்படும்போதெல்லாம் அங்கேத் தேடலும் பிறக்கிறது.


தேடல் தேவையின் அவசியமெனில் குழந்தைக்கு என்ன தேவை ?உணவும்,அம்மாவும்தானே என்று தோன்றலாம்.உண்மைதான்!அம்மா இருந்தாலே எப்பாடு பட்டேனும் தன் குழந்தைக்கு உணவு படைப்பாள்.இவைத்தவிர தன்னை சுற்றி உள்ள ஒவ்வொரு மனிதரையும்,ஒவ்வொரு பொருளையும் பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் குழந்தைக்கு உண்டு ஆதலால்,குழந்தையும் அவற்றைப் பற்றி அறிய ஒருவிதத் தேடுதலை மேற்கொள்ளுகிறது.ஒருவர் புதிதாக தெரிந்தால் அம்மாவின் பின்னால் ஒளிந்து கொள்கிறது;குழந்தையின் அம்மா அவரை அறிமுகம் செய்து வைத்து அவரிடம் போகச் செய்கிறாள்;அப்படி அவரிடம் போகும்போது அவருடைய குனாதிசயத்தைத் தேட அல்லது அறிய முற்படுகிறது அக்குழந்தை எவ்வாறு?அவர் தன்னை கொஞ்சுகிறாரா?அல்லது 'உன் பெயர் என்ன?உன்னை தூக்கிப் போகட்டுமா?' என்று மிரட்டலோடு கூடிய கேள்விகளைக் கேட்கிறாரா? என்ற சோதனையுடன் அடுத்தமுறை அவரிடம் செல்வதை பற்றிய முடிவுகளை எடுக்கிறது.


ஒருவயதில் நடை பழகும் ஒருகுழந்தை விழுந்து விடுவோமென அஞ்சி நடக்காமலிருப்பதில்லை.தனியாக நடந்து விழுந்தால் எதையாவது தேடித் பிடித்துக் கொண்டு நடக்க முயற்சி செய்கிறது.அம்மா பிறரிடம் பேசும்போது தனக்கு எளிதாக வரக்கூடிய வார்த்தைகளை தேடித் பிடித்துக் கொண்டுவிடுகிறது.வீட்டில் புதிதாக ஒரு விளையாட்டு பொம்மையைப் பார்த்தால் அது என்ன?எப்படி நகரும்?தனக்கு எப்படி மகிழ்ச்சியளிக்கும்?என்றத் தேடலை மேற்கொள்கிறது.இப்படி ஒரு குழந்தைக்கே நிறையத் தேடல்கள் தொடரும்போது...ஒரு இளைஞனுக்கு என்னென்ன தேவைகளோ அவை எல்லாமே தேடல்கள்தானே!


பள்ளிக்கு செல்லும் குழந்தை எதைத் தேடுகிறது?முதலில் அம்மா,அப்பாவின் கட்டாயத்தின் பேரில் சென்றாலும்,அங்கு தனக்கான நண்பர்களைத் தேடிக்கொள்கிறது.பின்பு கற்பிக்கப்படும் பாடத்தில் கேள்விகள் கேட்பதன் மூலம் வாழ்க்கைக்குத் தேவையான 'இது ஏன் இப்படி இருக்கக் கூடாது?' என்றத் தேடலைக் கற்றுக்கொள்கிறது. பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி, மாறுவேடப்போட்டி இப்படி ஏதாவது ஒரு போட்டியில் பங்கேற்பதன் மூலம் தன்னுடைய திறமைகளைத் தேடுகிறது.தன்னுடைய திறமையைத் தேடி வெளிக்கொணர்ந்த பின் திறமைக்கான அங்கீகாரத்தைத் தேடுகிறது.


இப்படி தொடரும் தேடல்களில் முக்கியமாக என்னென்ன தேவைகள் ஒரு சராசரி மனிதனுக்கு ஏற்படுகிறது என்று இந்த சராசரி மனிதனில் தோன்றியவையே இனி வரும் கட்டுரைகளில்!
















முடிந்த பாதையில் முடியாத தேடல்....!

என் வலைப்பூவில் வெளியிடப்படும் பதிவுகளை தவறாமல் படித்து வரும் நெஞ்சங்களுக்கு நன்றி!ஒரு புதியப் பதிவுடன் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.இப்பதிவுக்கான ஒரு சுவையான சம்பவம் உள்ளது.நான் இஸ்கான் கோயிலுக்கு சென்றிருந்தபோது அங்குள்ள அரண்மனைத் தோட்டத்தில் சிறிது மட்டுமே செல்லக்கூடிய ஒரு பாதை இருந்தது.இருபுறமும் செடிகள் சூழ்ந்து நடுவில் மிகத் தெளிவாக அமைக்கப்பட்டிருந்த அப்பாதையைக் கண்டதும் புகைப்படம் எடுக்கும் ஆவல் தொற்றிக் கொண்டது.இதுதான் அப்புகைப்படம்








இப்படத்தைப் பார்த்ததும் உங்களுக்கெல்லாம் என்ன தோன்றுகிறது?
இப்புகைப்படத்தில் என்னை சிந்திக்க வைத்த ஒரு விஷயம், சிறு தொலைவுக்குள் முடிந்துவிடும் பாதைக்கு அப்பால் காண்பதற்கு ஒரு மலை மட்டுமே தெரிந்தும் எங்கு இந்த மனிதன் நடந்து போகிறான் என்பதுதான்!அதற்கு ஒருவரியில் உதித்த கவிதை இதோ!

முடிந்த பாதையில்
முடியாத தேடல்....!

இது மனதிற்கு கொஞ்சம் தத்துவார்த்தமாகப் படவே 'தேடலைப்' பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது.நாம் அனைவருமே பிறப்பு முதல் இறப்பு வரை எதையோ தேடிக் கொண்டேதானிருக்கிறோம்.அப்படிப் பட்ட தேடல்களில் சிலவற்றைப் பற்றி எழுதுகிறேன்!