வியாழன், 6 ஆகஸ்ட், 2009

ரியாலிட்டி ஷோ-வின் கலாச்சார சீர்கேடு

தொலைக்காட்சி என்றாலே புதுப்பாடல்கள்,தொடர்கள்,பழைய படங்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் நல்ல பாடகர்,நடனக்கலைஞர் என்று மிகச்சிறந்த கலைஞர்களைத் தேர்ந்தெடுக்க 'ரியாலிட்டி ஷோ' அறிமுகப்படுத்தப்பட்டது மக்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது.இதை கண்டு கொண்ட மீடியா துறையினரும் மக்களுக்கு பிடித்ததைக் கொடுக்க முடிவு செய்து எல்லாவற்றிற்கும் ரியாலிட்டி ஷோ நடத்த ஆரம்பித்துவிட்டனர்.

ரியாலிட்டி ஷோ நடத்துவது தவறு என்பதற்காக நான் எழுதவில்லை.எதற்காக நடத்துகிறார்கள் என்பதை மக்களும் யோசித்து பார்க்க வேண்டும்.இதுவரை நடந்துகொண்டிருக்கும் 'ரியாலிட்டி ஷோ'க்களைப் பார்க்கும்போது,சிறந்த பாடகர்,நடனக்கலைஞர்,சிறந்த நகைச்சுவைக்கலைஞர் என்று கலைத்துறைக்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது.இவையும் ஒருவகைத் திறமைத் தேடல்தான் என்றாலும் கூட,நம் நாட்டில் எத்தனை பேர் கலைத்துறையில் மட்டுமே உள்ளனர்?ஏன் வேறு எந்தத் துறையிலுமே திறமையானவர்களைத் தேடி அறிமுகப்படுத்தவேண்டிய அவசியமே இல்லையா...?

கடந்த ஜூலை அன்று அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் 'பேச்சுலரெட்' என்ற ரியாலிட்டி ஷோவின் முடிவை தற்செயலாகக் காண நேர்ந்தது.அந்நிகழ்ச்சியின் அம்சம் என்னவென்றால்,ஒரு பெண் தனக்கான ஆண்மகனை 'பல'வழிகளில் தேர்ந்தெடுப்பதுதான்!அதையே சில திருத்தல்களோடு 'ராக்கி கா சுயம்வர்' என்ற பெயருடன் என்.டி.டி.வி நடத்தியது எனக்கு சிறு அதிர்ச்சிதான்!எவற்றிற்குதான் 'ரியாலிட்டி ஷோ' என்பது இல்லையா?

அதேபோல் அமெரிக்க தொலைக்காட்சியின் பிரபலமான 'தி மொமென்ட் ஆப் ட்ருத்' எனும் நிகழ்ச்சியின் தழுவல்தான் நம் ஊர் ஸ்டார் பிளஸ் நடத்தும் 'சச் கா சாம்னா'.இதில் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்னே,அவர்களை மயக்க நிலையில் ஆழ்த்தி, ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் கேள்விகளுக்கு 'பாலிகிராப்' கருவி(பதில் கூறும் பொது இதயத்துடிப்பில் ஏற்படும் மாறுதல்களை வைத்து உண்மையா பொய்யா என்பது தெரிந்துவிடும்) மூலம் உண்மையான பதில்களைப் பெற்று பதிவு செய்து கொள்ளப்படும்.பின் நிகழ்ச்சியில் அமர்ந்ததும் அதே கேள்விகள் கேட்கப்படும்.பின் இரு பதில்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உண்மையான பதில்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தரப்படும்.நல்ல நிகழ்ச்சிதானே என்கிறீர்களா?கேள்விகள் அனைத்தும் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத,உறவுகளை சிதைக்கும் அந்தரங்கங்கள்!பணத்திற்காக எத்தகைய பதிலையும் கூறும் மனப்போக்கை தூண்டும் ஒரு நிகழ்ச்சி!

'டேட்டிங் இன் தி டார்க்' என்று கூட ஒரு நிகழ்ச்சி அமெரிக்காவில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.அதாவது ஒருவரையொருவர் சந்தித்திராத ஆண்கள் மற்றும் பெண்களுக்குள் இருட்டில் நடக்கும் விஷயங்கள்.இதைத்
தழுவிய நிகழ்ச்சிகள் இந்தியாவில் ஒளிபரப்பாகாமல் இருந்தால் சரி!


இதிலெல்லாம் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றும் நம் ஊர் தொலைக்காட்சிகள் ஏன் 'ஸ்பெல்லிங் பீ' போன்ற நல்ல நிகழ்ச்சிகளை பின்பற்றத் தவறிவிட்டன?எங்கோ ஒரு மூலையில் ஒன்றிரண்டு குழந்தைகள் அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வெளிநாடு சென்று வந்தனர் என்று கேள்விப்படுவதை விட இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தி,தொலைக்காட்சியில் ஒளிபரப்பலாமே!குழந்தைகளிடம் மொழிப்பற்றை வளர்க்க,கற்பனைத்திறத்தை அதிகரிக்க,ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர,பொதுப்பணிகள் செய்ய,சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுக்க,சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுக்க,அவலத்தில் வாழும் மக்களுக்கு உதவ,ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவரை அடையாளம் காண என்று நம் நாட்டில் மக்களுக்கு தெரிவிக்க,பங்குபெற வைக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.ஏன் அரசியலில் ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குள் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் மக்கள் யாருக்கு ஒட்டு போடுவது என்ற தீர்மானத்திற்கு வர உதவலாம்.அதை விடுத்து நாகரீகம் என்ற பெயரில் தேவையில்லாத விஷயங்களுக்கும்,பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்த 'ரியாலிட்டி ஷோ'க்களை என்னவென்று கூறுவது...?தமிழ்நாட்டில் ஒரு தனியார் தொலைகாட்சி மட்டும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மொழிப்பற்றை வளர்க்கும் விதமாக 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' என்று நிகழ்ச்சி நடத்துவது நமக்கெல்லாம் சற்று ஆறுதலான விஷயம்!


ஆங்காங்கே கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.ஆனால் அவற்றை நாட்டின் மிக முக்கியப் பிரச்சனைகளுக்கு மக்களின் கருத்து என்ன என்பதை அரசாங்கத்திற்கு தெரிவிக்கும் விதமாக நடத்தினால் இன்னும் சிறப்பாயிருக்கும்!

செவ்வாய், 21 ஜூலை, 2009

திருமங்கலம்...தொடருமா?

லோக்சபா தேர்தலுக்கு பின் தமிழகத்தில் தொண்டாமுத்தூர், கம்பம், இளையான்குடி, பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகியத் தொகுதிகளில் இடைத்தேர்தல் கலை கட்டியிருக்கும் இச்சமயத்தில்,திடீரென்று அ.தி.மு.க தேர்தல் புறக்கணிப்பு அறிவித்திருப்பது மக்களுக்கு சிறு அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.காரணம்

1.எதற்கும் கலங்காத அ.தி.மு.க தலைவியா தோல்வி பயம் கொண்டிருப்பது என்பதும்,அடுத்து
2.தங்கள் வாக்குகளின் பண மதிப்பு குறைந்துவிடுமோ என்ற கவலையும்தான்.

உண்மைதான் !எதற்கும் கலங்காத ஜெயலலிதா ஏன் தேர்தலை புறக்கணித்தார்?

கடந்த 2008 டிசம்பர் மாதம் திருமங்கலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்ததே! 'அதே வழியைத்தான் தி.மு.க லோக்சபா தேர்தலிலும் பின்பற்றியது;நடைபெறவிருக்கும் தேர்தலின் முடிவும் அப்படியே இருக்கும்' என நினைத்து ஒதுங்க முடிவெடுத்தாரா?அல்லது தொடர்ந்து தோற்றுக்கொண்டிருந்தால் தி.மு.கவின் ஏளனம் அதிகமாகும் என்று பின்வாங்கிவிட்டாரா?

எது எப்படி இருந்தாலும்,தேர்தலைப் புறக்கணிப்பது என்பது ஜனநாயக முறையை அவமதிப்பது அல்லது அதற்கு மாறாக செல்வதையேக் காட்டுகிறது.அதெல்லாம் சரி...தேர்தல் ஜனநாயக முறைப்படியா தேர்தல் நடக்கிறது என்று கேட்கலாம்? 'ஜனநாயகத்தை பணநாயகம் வென்று விட்டது' என்று அறிக்கையும் விடலாம்.'தேர்தல் ஆணையமே பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறுகிறது' என்றும் கூறிக்கொள்ளலாம்.ஆனால் இதற்கு முன் பலமுறை மாநிலத்தை ஆட்சி செய்த ஒரு கட்சி எதிர்த்து நின்று போராடாமல் விலகி நின்று வேடிக்கை பார்க்கும் போது,"ஐந்து தொகுதிகளிலும் அ.தி.மு.கவே வெற்றி பெற்றாலும் கூட மக்களுக்காக போராடப் போவதில்லை"என்பது தெள்ளத்தெளிவாகிறது.தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் ஒரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்திருந்தும் விலகி நின்று வேடிக்கை பார்ப்பது, போரில் புறமுதுகிட்டு ஓடும் வீரனை விட கோழைத்தனமாகத் தெரிகிறது.அதற்கு பதிலாக உச்ச,உயர் நீதிமன்றங்களை நாடியிருக்கலாம்.அங்கு போனாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவான பதில்தான் வருமென்றாலும்,எறும்பு ஊரக் கல்லும் தேயுமல்லவா?நீதிமன்றங்களும் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல்,உண்மைக்குக் கட்டுப்பட்டு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியை பாராட்டியே தீர வேண்டும்.காரணம் எம்.ஜி.ஆர் காலத்தில் பலமுறை தோல்வியைத் தழுவியவர்;ஐந்து முறை ஆட்சி அமைத்த பெருமைப் பெற்றும் ஒரு முறை மட்டுமே ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தார் .இப்படி குறைகள் இருப்பினும் தேர்தலைப் புறக்கணிக்காமல் களம் கண்டவர்.மேலும் அவரைப் பற்றிக் கூற வேண்டிய இன்னொரு விஷயம் வெறும் இலவச அறிவிப்புகள் மூலமே வெற்றியடைய முடியும் என நிரூபித்தவர்.

மக்களிடமோ தேர்தல் என்றாலே தலைமை மாற்றம் குறித்து யோசிக்கும் மனநிலை மாறி,இந்தமுறை தங்கள் வாக்குகளுக்கு என்ன விலை தருவார்கள் என்ற யோசனைதான் அதிகமாகிவிட்டது.

அரசியல்வாதிகளும் "இந்த தொகுதி இந்த கட்சிக்குத்தான்!" என்ற நிலைப்பாடை தக்கவைத்துக் கொள்வதற்காக வாக்குகளுக்கு விலை கொடுக்கின்றனர்.எதிர்க்கட்சிகளோ அதே சூத்திரத்தை உடைத்தெறிய விலை கொடுக்கின்றன.இப்படி இருகட்சிகளும் கொடுக்கும் பணத்தை மக்கள் தராசில் வைத்து,அது எந்த பக்கம் சாய்கிறதோ அந்தப் பக்கமே நியாயவாதியாகின்றனர்.

ஆனால் வரும் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவின் புறக்கணிப்பால் அந்த தொகுதி மக்களுக்கு கிடைக்கவிருந்த வருவாயில் ஜெயலலிதா மண்ணை அள்ளி போட்டுவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.தி.மு.கவினருக்கோ அதிக விலை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.தேர்தல் ஆணையத்திற்கோ சிறிது தலைவலி குறைந்தது.இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அ.தி.மு.கவின் புறக்கணிப்பு தெரிந்தோ தெரியாமலோ விஜயகாந்தின் வளர்ச்சிக்கு உரமிடுவதாக அமைந்துவிட்டது.'2011- சட்டசபைத் தேர்தலுக்கு இந்த தேர்தல் முடிவுகள் அடித்தளமாக அமையும்' என கேப்டன் நம்ப ஆரம்பித்துவிட்டார்.அதுவும் சரிதான்....!எத்தனை நாளைக்குத்தான் இருகட்சி ஆட்சி முறையையே பார்ப்பது?அடுத்தவனுக்கும் வழிவிடுங்கய்யா...!

செவ்வாய், 7 ஜூலை, 2009

அரசியலில் இளைஞர்கள்....?

அரசியலில் இளைஞர்களுக்கும் வாய்ப்பு வேண்டும்.இதுதான் எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் விஷயம்.அதெல்லாம் சரி... எத்தனை இளைஞர்கள் இன்று அரசியலில் ஈடுபட தயாராக இருக்கின்றனர்?அல்லது அப்படி ஈடுபட்ட இளைஞர்களில் எத்தனை பேர் ஆட்சியில் உள்ளனர்?சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னரே மகாகவி பாரதியார்,


        ஒளிப்படைத்த கண்ணினாய் வா வா
உறுதிக்கொண்ட நெஞ்சினாய் வா வா

என்று அறைகூவல் விடுத்தும் ஒரு இளைஞனும் செவிசாய்த்தானில்லை.தமிழ்நாட்டை 85 வயது இளைஞர் ஆண்டு கொண்டிருக்கிறார்;அவரது ஆட்சியிலும் அவர் வயதொத்த இளைஞர்களே இடம்பிடித்த்ள்ளனர்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை ஆட்சி செய்த தி.மு.க.,அ.தி.மு.க இவ்விருக் கட்சிகளுமே ஒரு இளைஞனை அமைச்சராக்கிப் பார்த்ததில்லை.வழிவழியாக அரசியல் செய்யும் குடும்பத்திலிருக்கும் மூத்தவர்களுக்கே வாய்ப்புத் தரப்படுகிறது.வயதானவர்களுக்குதான் அனுபவ அறிவு இருக்கும் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்;இளைஞர்களுக்கோ சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமிருப்பதால் புதியத் திட்டங்களின் ஊற்றுக்கண்களாக திகழ்கிறார்கள்.1950- களிலேயே பண்டித ஜவர்ஹலால் நேரு அவர்கள், "The destiny of india will be shaped by the classroom" என்று வருங்கால பாரதத்தின் சிற்பிகளாக இளைய சமுதாயத்தினரைக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இன்றுவரை இளைஞர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.

தமிழ்நாட்டில்தான் இப்படி என்றால் நாடாளுமன்ற ஆட்சியில் இப்போதுதான் இளைய சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.ஒருவழியாக 39 இளைஞர்கள் பதவி ஏற்பு என்று சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்றால், முன்னாள் சபாநாயகர் பி.எ.சங்மாவின் மகள்,பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவின் மகன்,மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் பைலட்டின் மகன்,முன்னாள் காஷ்மீர் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லாவின் மகன்,விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரின் மகள்,தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மற்றும் பேரன்,காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்தின் மகன்....


இப்படி அங்கும் அரசியல் வாரிசுகளுக்கே இடமளிக்கப்பட்டுள்ளதேத் தவிர,உண்மையாக திறமையான,சமூக அக்கறை உள்ள மனிதர்களைத் தேடித் பிடித்து பதவித் தரப்படவில்லை.


இளைஞர்கள் வந்தால் ஓட்டுப்போடுவோம்;யாரும் வரத்தயங்குகிறார்களே என்று கூறும் மக்களுக்கு என் கேள்வி இதோ-

தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு ஏன் வெற்றியடையவில்லை?

காரணம் இந்த தொகுதி இவருக்குத்தான் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. 'அரசியல்வாதிகளே மோசம்' என்று வேதாந்தம் பேசுபவர்களுக்கு ஏனோ புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க மனம் வருவதில்லை.தனக்கு எந்த கட்சியால் லாபம் என்று பார்க்கத் துவங்கிவிட்டனர். பொதுப்பிரச்சனைகளைக் குறித்த ஆர்வம் மக்களிடையே குறையத் துவங்கிவிட்டது.தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் குறிப்பிட்ட ஒரு படிப்புப் படித்து, வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் அல்லது தங்கள் தொழிலைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர்; இதையேதான் அரசியல்வாதிகளும் நினைக்கின்றனர்,தங்கள் பிள்ளைகள் அவர்களுடைய குலத்தொழிலான அரசியலுக்கு வரவேண்டும் என்று.அப்படி வரும் இளைஞர்களாவது மாற்றுக்கருத்துடன் செயல்பட்டு,லஞ்சம் ஊழலற்ற அரசாங்கத்தை ஏற்படுத்தி,அடிமட்ட மக்களுக்கு இலவசமல்லாத நிரந்தர நலப்பணிகளை செய்வார்களேயானால் 2020-ல் இந்தியாவைப் பற்றின டாக்டர்.அப்துல் கலாமின் கனவுகள் 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவேறிவிடும்.அதற்கு 'முதலில் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு;பொய்,புறங்கூறாமை வேண்டும்.'என்ற கலாம் அவர்களின் அறிவுரையை ஆசிரியர்கள் ஏற்று மாணவர்களின் மனதில் சமூகம் குறித்த நல்லப் பதிவை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்களும் கல்வியை வியாபாரமாகப் பார்க்கும் மனப்போக்கையும்,நமக்கேன் வம்பு என்று ஒதுங்குவதையும் விடுத்து,தங்கள் பிள்ளைகளை சமூக அக்கறை உள்ள மனிதனாக வளர்க்க வேண்டும்.தேசப்பற்று என்பது காஷ்மீர் போரில் மரணமடைந்த வீரர்களுக்காக வருத்தப்படுவதும்,நிதித் திரட்டித் தருவதும் மட்டுமல்ல;வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்களைப் பார்த்து அவர்களின் பசியையும்,தேவைகளையும் போக்க என்ன வழி என்று யோசிப்பதும்தான்.எந்த மனிதனிடத்தில் இந்த சிந்தனை பிறக்கிறதோ,அவன் தனக்காக அதிக செல்வம் தேடி அலைய மாட்டான்;அரசியலை நிச்சயம் ஒதுக்க மாட்டான்;ஊழல் போன்ற செயல்களை ஏற்க மாட்டான்.

இந்தியா என்றுமே வன்முறையை தூண்டும் பேச்சைக் கூட அனுமதித்ததில்லை. ஆனாலும் நம் சமூக அமைப்பில் உள்ள சிறுசிறு குறைபாடுகளே இன்று நம் புலம்பலுக்கு மூலக்காரணம். அதாவது இரண்டு தலைமுறையினருக்கு முன்பு வரை இவர் என் பக்கத்து வீட்டுக்காரர்; என் தெருக்காரர்; என் ஊர்க்காரர் என்று இருந்த குழும உணர்வு இன்று நகரத்து பரபரப்பு வாழ்க்கைக்கிடையே புதைக்கப்பட்டுவிட்டது. மனிதர்களுக்கிடையே இருந்த பரஸ்பர அன்பு,நம்பிக்கை சிதிலமடைந்து போன நிலையில்,'யார் எப்படி போனால் என்ன?நம் வரை சந்தோஷமாக இருக்கிறோமா!' என்ற மனப்போக்குள்ள மனிதர்கள் மிகுந்து விட்டனர்.சமுதாய உணர்வு பிறக்குமிடம் இந்த குழும உணர்வுதான்.இந்த குழும உணர்வு முதலில் பள்ளியில் கற்பிக்கப்பட வேண்டும்.பள்ளியில் குழந்தைகள் ஒற்றுமையாகதானே இருக்கிறார்கள் என்று தோன்றலாம். 'இவன் என் சக மாணவன் ;கஷ்டப்படும் இவனுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும்' என்ற உணர்வை வளர்க்க வேண்டும்.அரசாங்க ஊழியர்களும்,கல்லூரி மாணவர்களும் மாதம் ஒருமுறை சமூகம் சார்ந்த பணிகள் செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்.சின்ன சின்ன தவறுகளுக்காக அளிக்கப்படும் தண்டனை மற்றும் அபராதத் தொகைக்குப் பதிலாக இந்த சமூகப்பணிகளை செய்ய சொல்ல வேண்டும்.சுற்றியிருக்கும் மக்கள் படும் துயரங்களையும்,அவலங்களையும் மனிதனின் கவனத்துக்கு அடிக்கடி கொண்டு வரும்போது இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பு உண்டு;இது என் ஊர், என் மக்கள்,என் நாடு என்ற உணர்வு பிறக்க வழி ஏற்படுகிறது.

சரி...என்ன மாதிரி சமூகப் பணிகள் செய்ய வைப்பது?

பழுதடைந்த மாநகராட்சிப் பள்ளியை தூய்மைப் படுத்துவது,கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுவது,வருடம் முழுதும் உழைக்கும் காவல்துறை மற்றும் ஆசிரியர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிப்பது,முதியோர் மற்றும் அநாதை இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக புத்த்தகங்களை வாசிப்பது,அவர்களை மனம் விட்டு பேச வைப்பது இவையெல்லாம் கூட சமூகப் பணிகள்தான்!மனிதனை மனிதன் நேசித்து செய்யும் எந்த பணியும் சமூகப் பணிதான்!

இப்படிப்பட்ட பணிகளை செய்யத்தான் ஒருசில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றனவே என்று நினைத்து ஒதுங்காமல் இளைஞர்கள் இத்தகைய பணிகளை செய்வார்களேயானால் , சதாசர்வகாலமும் மக்களின் பசி, வறுமையைப் பற்றி பேசுவது குறைந்து எதிர்காலத்தில்மக்களின் தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்று எண்ணும் அளவுக்கு நாடு வளர்ச்சியடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவை எதுவும் ஒருநாள் ஓரிரவில் ஏற்பட முடியாதுதான். ஆனால் ஏதேனும் ஒருகட்சியாவது ஒரு இளைஞனுக்காவது வாய்ப்பு கொடுத்தார்களேயானால் அதுவே நம் கனவிற்கு மிகப் பெரிய அடித்தளமாக அமையும். மேலும் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற சுதந்திரத்தை கட்டுப்படுத்தி,'தேர்தலில் நிற்க குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பும்,மக்கள் நலப்பணியும் செய்திருக்க வேண்டும்' என்று சட்டம் கொண்டு வரவேண்டும்.

திங்கள், 11 மே, 2009

கூட்டணி ஆட்சி

கூட்டணிக்கட்சி ஆட்சிமுறை என்பது நாடாளுமன்ற ஆட்சியின் ஓர் அங்கமாகி விட்டது.இக்கூட்டணிக் கட்சிமுறை ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்து நாட்டின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவே உருவாக்கப்பட்டன.ஒரு கட்சி தனித்து நின்று போட்டியிட்டு ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலையில்,அடுத்த பெரும்பான்மை கட்சிகளுடன்தொகுதி பங்கீடு செய்துகொண்டு ஆட்சி அமைக்கிறது.இதுநாள் வரை சுமார் 75% இந்திய மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளே(2004-ல் காங்கிரசு 26.53% வாக்குகளும்,1999- ல் பா.ஜ.க 23.75% வாக்குகளும்)ஆட்சியில் அமர்ந்து அதிகாரம் செலுத்தி வந்திருக்கின்றன.

இந்தியாவில் மாநிலங்களிலும்,மத்தியிலும் கடந்த 20 வருட காலங்களாக இந்த கூட்டணி கட்சிமுறை நடந்து கொண்டிருக்கிறது.இந்தியா இனம்,மொழி,மதம் போன்றவற்றால் வேறுபட்டிருப்பதால்,வேறுபட்ட சிந்தனைகளையும் அடக்கிக் கொண்டுள்ளது.இந்த காரணத்தினாலேயே தேர்தலில் பெருவாரியான வாக்குகளை பெரும் கட்சிகள் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்துவிடுகின்றன.
நிலையான கூட்டணி வைத்துக்கொள்ள அக்கட்சிகள் தங்களுடைய சிந்தனை மற்றும் கருத்துகளை சிறிதேனும் மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது விட்டுக்கொடுத்து ஒத்துழைப்புத் தர வேண்டும்.அடுத்த கட்சிகளின் கருத்துக்களுக்கான விளைவுகளை நேரடியாக எடுத்துக் கூறும் ஆற்றல் வேண்டும்.ஆனால் இவை எதுவுமே இந்தியாவில் நடப்பதில்லை.இந்தியாவில் கூட்டணியிலுள்ள அரசியல் கட்சிகள்,எப்போதுமே ஆட்சி நடத்தும் கட்சியுடன்(அரசுடன்)ஒத்துப்போவதில்லை.ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி விருப்பு,வெறுப்புகள்,நம்பிக்கைகள்!!எனவே ஒரு திட்டத்தைப் பற்றின மாற்றுக்கருத்து வரும்போது அவைக் கூட்டணியில் நிலைப்பதே கேள்விக் குறியாகிவிடுகிறது.அரசின் பொதுத் திட்டங்களில் உள்ள நன்மைகளை கூட அவர்களால் சில சமயங்களில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.மத்தியில் காங்கிரசு கொண்டு வந்த இந்திய அமெரிக்க நாடுகளுக்கிடையேயான அணு சக்தி ஒப்பந்தத்தால் 'தடையற்ற மின்சாரம்' என்ற பலன் தெளிவாக தெரிந்தும்,'பாதுகாப்பின்மை'என்ற ஒரே காரணத்தை திரும்ப திரும்ப கூறிக் கொண்டு அதை எதிர்த்த இடது சாரிகள் இதற்கு சிறந்த உதாரணம்!

அதனால் கூட்டணி ஆட்சி முறையே நிலையாமையான ஒன்று எனக் கூறிவிடமுடியாது.1999- லிருந்து கடந்த பத்து வருடங்களாக தொடர்ச்சியாக நடந்து வரும் கூட்டணி அரசுகள் இதை உடைத்தெறிந்து விட்டன.கேரளாவிலும்,மேற்கு வங்கத்திலும் வெற்றிகரமான கூட்டணியே தொடர்கிறது.எதிர்ப்புகள் நிறைந்த சூழ்நிலையிலும் கூட்டணி முறையை வெற்றியாக்கிய இம்மாநிலங்களிடமிருந்து மற்றக் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டியதோ ஏராளம்!

உண்மை என்னவென்றால் இந்தியா கடந்த காலத்திலும் கூட்டணி முறையை பின்பற்றியது,இனி எதிகாளாத்திலும் அப்படியே!எனவே அரசியல் கட்சிகள் கூட்டணியை ஒரு விளையாட்டு போல் பார்க்கும் மனப்போக்கை விடவேண்டும்.

வெற்றி பெறுவதற்காக ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு,அது நிறைவேறியதும் வேறு ஒரு கட்சிக்கு மாறுவது தேர்ந்தெடுத்த மக்களை முட்டாளாக்கும் செயல்!வாக்காளர்கள் என்றுமே தேர்தலுக்கு முன் ஏற்படும் கூட்டணியையே விரும்புவர்,ஏனெனில் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.ஆட்சிக்கு பிந்தைய கூட்டணியில் வாக்காளனின் முடிவு நிராகரிக்கப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை!

இதற்கு உதாரணமாக பா.ம.க கூட்டணி அமைக்கும் முறையைக் கொள்ளலாம்.

1998-ல் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றது.அந்த தேர்தலில் அ.தி.மு.க 28
இடங்களைப் பெற்றது.1999-ல் பா.ம.க, தி.மு.க அணிக்கு மாறியது,அந்த தேர்தலில் தி.மு.க 25 இடங்களைப் பெற்றது.2001-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அது அ.தி.மு.கவுடன் கூட்டணி கொண்டது.அந்த தேர்தலில் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது.2004-ல் நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.கவுக்கு மாறியது.அப்போது தி.மு.க 39 இடங்களைப் பெற்றது.2006 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.கவிலேயே தொடர்ந்தது,தி.மு.கவும் ஆட்சிக்கு வந்தது.இப்போது 2009 நாடாளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.கவுக்குத் தாவி உள்ளது...?!

காங்கிரசோ,பா.ஜ.கவோ உருவாக்கும் அணிகள் தங்களது பெரும்பான்மையை தக்கவைத்துக்கொள்வதற்கான கணக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று.அதனால்தான் 1999-ல் தி.மு.க பா.ஜ.க கூட்டணியிலான தலைமையிலும்,2004-ல் காங்கிரசு தலைமையிலான கூட்டணியிலும் பங்குபெற முடிந்தது.அந்த கூட்டணிகள் அரசியல் கருத்து அடிப்படையில் அமைந்தவை அல்ல,தலைமையை தக்க வைத்துக்கொள்ள உருவாக்கப்பட்டவை!

இப்போதைய 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது காங்கிரஸ் எப்படி வெற்றியடைந்தது?மக்களுக்கு மன்மோகன் சிங்கின் மேல் உள்ள நம்பிக்கையா?காங்கிரஸ் குடும்பத்தாரின் மேல் உள்ள பாசமா?அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளின் பலமா?இவைதான் பெரும்பாலானோர் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் கேள்விகள்.

உண்மையில் காங்கிரஸின் வெற்றிக்கு காரணம் கூட்டணிக் கட்சிகள்தான்.ஆனால் கூட்டணியின் பலத்தால் அல்ல;அந்தந்த கட்சிகள் தங்கள் அரசைக் காப்பாற்றிக் கொள்ள கொடுத்த விலையினால்.ஆம்!தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான தி.மு.க தோற்றால்,மாநில ஆட்சியே போய்விடும் என்ற நெருக்கடியால் வென்றது.

தமிழ்நாட்டில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக் கொண்ட கட்சிகள் ச.ம.க.,நா.ம.க. மற்றும் ஜ.க. இந்த கட்சிகளின் பெயர்கள் கூட மக்களிடம் சரியாக சென்றடையவில்லை.தவிர தேசிய அளவில் பா.ஜ.க மத உணர்வை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வந்தது.'இந்து' என்ற ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்துவதால் இந்தியாவின் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற அடையாளமே சீர்கெடும். இதனால் மத,இனக் கலவரங்கள் கிளம்பி வன்முறை வெடிக்கும்.இதை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.மேலும் பா.ஜ.க 'ராமர் கோயில் கட்டுவது' என்பதை அதிமுக்கியமாக்கி இன்னபிற அம்சங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கை தயார் செய்தது. 1999 தேர்தலின் போதும் இதையே முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வெற்றியும் பெற்றது.ஆனால் ஆட்சியில் அமர்ந்தபின், "எங்கள் ஆட்சி தனிப்பட்ட ஆட்சி அல்ல;தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி.அதனால் நாங்கள் கூட்டணி ஆட்சியின் ஆலோசனைப் படியும் நடக்க வேண்டும்" என்று கூறிவிட்டது.இது தேர்தல் அறிக்கை நம்பகத்தன்மையைக் குறைத்துவிட்டது.பா.ஜ.க என்ன தேர்தல் அறிக்கை கொடுத்தாலும் அது நிறைவேறுமா என்ற சந்தேகத்தை மக்களிடையே உண்டு பண்ணியது.அடுத்து 2008 நவம்பர் மாத மும்பையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலை வைத்தும் பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. உண்மையில் 'பயங்கரவாதத்தை' பொறுத்தவரை இரு கட்சிகளின் நிலைப்பாடும் ஒன்றே!ஏனென்றால் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோதுதானே நாடாளுமன்றத் தாக்குதல் நடைபெற்றது.எனவே இந்த கருத்தும் மக்களிடம் எடுபடவில்லை.

சரி.. அ.தி.மு.க கூட்டணிக்கு வருவோம்.

கடைசி நேரத்தில் அணி மாறிய பா.ம.க.,எத்தனை அவமானப் பட்டாலும் சீட்டிற்காக ஒட்டிக்கொண்டிருக்கும் ம.தி.மு.க.,போன ஆட்சியில் ஜெயலலிதாவை அவதூறு பேசிவிட்டு மூன்று சீட்டுகளுக்காக அணிமாறிய கம்யூனிஸ்டுகள் இவைதான் அ.தி.மு.கவின் கூட்டணி.இது தவிர தேர்தலில் வென்றால் காங்கிரசோடு பேரம்;படியாவிட்டால் பா.ஜ.க என்ற நிலையும் மக்களுக்குப் புரிய போக "அ.தி.மு.கவுக்கு வாய்ப்புகள் அதிகம்" என்ற தேர்தல் கருத்துக் கணிப்பு பொய்த்துப் போனது.

இன்றைய சூழலில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்;யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம்;மந்திரி பதவியும் வாங்கிவிடலாம் என்ற நிலை உருவாகிவிட்டதால்,மூலைக்கு மூலை கட்சிகள்
உருவாகிவிட்டன.இதனால் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிந்து போகக் கூடிய சூழ்நிலை உருவாகியது.உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் தே.மு.தி.க.,ஆந்திராவில் சிரஞ்சீவியின் கட்சி,பீகாரில் லாலு பிரசாத்!இவையும் கூட காங்கிரஸின் வெற்றிக்கு காரணம்.

இப்படி எண்ணிக்கையின் அடிப்படையிலேயே கூட்டணிக் கட்சிகள் ஆட்சி அமைத்துக் கொண்டு வருகின்றன.அரசியல்வாதிகள் கட்சிதாவும்போது கூறும் சமாளிப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு முறையான கூட்டணி மற்றும் வெற்றிகளைப் பெற்று மக்களுக்கு நலப்பணிகளை செய்வார்களா?

கூட்டணி முறையில் அளவுக்கதிகமாக விட்டுக்கொடுக்க வேண்டியுள்ளதாக அரசியல் கட்சிகள் நினைக்கும்போதும் அரசு நிலையாமை ஏற்படுகிறது.அதன்பின் நாடாளுமன்ற தேர்தலை தவிர்க்க 'நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தீர்மானம்' இப்படி மாற்று வழிகளை இந்திய அரசு கையாள நேர்கிறது.ஆனால் தொகுதி இடைத்தேர்தல் தவிர்க்க முடியாததாகி விட்டது.எனவே பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரு கட்சியிலிருந்து மறுகட்சிக்குத் தாவி,பின் இடைத்தேர்தலிலும் அதே தொகுதியை பெறும் அரசியல்வாதிகளுக்கு 'தேர்தல் செலவை ஏற்க வேண்டும்' என சட்டம் கொண்டுவரப்படவேண்டும்.அப்போதுதான் இந்த கட்சித் தாவும் அரசியல் முறை தீர்வுக்கு வரும்!

அரசியல் கட்சிகளும் கூட்டணி முறையை சுமூகமாக கொண்டு செல்ல நேரடியான சூத்திரங்கள் எதுவும் இல்லை என்பதை மனதில் கொண்டு அவர்களுடைய சிந்தனை மற்றும் கொள்கைகளை சிறிதேனும் மாற்றிக் கொண்டு கூட்டணியை நிலை நிறுத்தி மக்களுக்கு சேவை செய்யவேண்டும்!



செவ்வாய், 21 ஏப்ரல், 2009

நாகரீகம்......?


கடந்த ஏப்ரல் 30 அன்று மும்பையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது.அதில் வாக்களித்த திரைப்பட பிரபலங்கள் தாம் வாக்குப் பதிவு செய்ததன் அடையாளமான மை வைத்த நடுவிரலை பத்திரிக்கைகாரர்களுக்கும்,புகைப்படக்கரர்களுக்கும் காண்பித்தனர்.அவற்றை பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் காண்பிக்கவும் செய்தனர்.அதைப் பார்த்து நான் அதிர்ச்சி மட்டுமல்ல கோபமும் கொண்டேன்.மும்பையில் பெரும்பாலான நகரவாசிகள் அனைவரும்தான் வாக்குப் பதிவு செய்துள்ளனர்,இவர்கள் வாக்களித்ததில் மட்டும் அப்படியென்ன சிறப்பு...என்பதல்ல என் கோபம்!

அவரகள் வாக்களித்த விரலை மட்டும் உயர்த்தி(மற்ற விரல்களை மூடியபடி)காண்பித்த விதம்!உலகில் பெரும்பாலானோர் இதன் அர்த்தத்தை நன்கு அறிவர்.வாக்குப் பதிவு செய்ததன் அடையாளகமாக வேண்டுமானால் கொள்ளலாமே தவிர நாகரீகமான செயலாகக் கருத முடியாது.

Celebrities என இவர்களைப் பின்பற்றும் இளைஞர்கள் கேட்கலாம் இதில் என்ன தவறு?என்று.மை வைத்த விரலை மட்டும் காண்பிக்க நினைத்தோம் என்று தர்க்கமும் செய்யலாம்!வரும் நாட்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் மாநிலங்களில் இதையே பின்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

இளமையின் அடையாளங்களாகக் கொண்டு பின்பற்றப்படும் இத்தகைய செய்கைகளை நான் குறைகூறவில்லை,அது பிறரைப் பாதிக்காத வரை!! இந்த பிரபலங்கள் யாரை நினைத்து விரலை உயர்த்தினர் என்பது தெரியவில்லை.தாம் வாக்களித்த அரசியல்வாதியின் பிரதிவாதிக்கா....?இல்லை...நெடுநாட்களாக திட்டம் அமைத்து,உழைத்து நாடு முழுதும் தேர்தல் நடத்தும் ஆணையத்திற்கா.....?

சின்ன சின்ன விஷயங்களில் கூட தங்களைப் பின்பற்றும் ரசிகர்கள் இருக்கையில் இதுபோன்ற விஷயங்களை தவிர்க்கலாமே!

இந்தியா தொழில்துறை,பொருளாதாரம்,வானவியல் ஆராய்ச்சி என்று முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கையில் நமது தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவு செய்பவர்களின் அங்க அடையாளங்களைப் பதிவு செய்யும் biometric சாதனங்களை பயன்படுத்தலாமே!

வழக்கம் போல்....தேர்தல்...!

பிரச்சாரம் முடிந்ததும்
'நல்ல கலருப்பா' ,
'என்ன குரல்'
எனும் கொள்கைப் பேசிக்
கலையும் கூட்டம்!

யாராவதொரு
'அடுத்த பிரதமர்'
'நன்றி வணக்கம்' எனத்
தமிழில் பேச
ஒருவரிப் புரிந்ததில்
புல்லரித்துப் போகும் தொண்டர்கள்!

ஏதோப் பிரச்சனைக்காக
தெருவில் நின்று
போராடியப் பட்டியல்
போகுமிடமெல்லாம் பறையடிக்கப்படும்
தான் மட்டுமே தலைவனென்று
நினைவுப்படுத்தப்படும்!
அல்லது
அறிக்கைவிட்டு அனுதாபம் தேடும்!

சுவற்றில்
இடம்பிடிக்கப் போட்டி!
மக்கள் மனதில் அல்ல!

தேடித்தேடி
பொத்தானை அழுத்தினாலும்
சரியான பொத்தான்
இன்றுவரை
யாருக்குமே அகப்படவில்லை!!

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

நரை

வழக்கம் போல்
கண்ணாடிப் பார்க்கிறேன்....

வெயிலில் ஒளிர்ந்ததற்கு அடையாளமாய்
முகத்தில் கருமை சுவடுகள்
முல்தானிமெட்டி போட்டு வெள்ளையாக்கிடவேண்டும்
மனதில் தீர்மானித்துக்கொண்டேன்!

அடுத்து.....

தச்சன் இழைத்த
மிச்ச மரச்சுருலென
நெற்றி விழுந்த கேசத்தை
விரலால் கோதி பெருமிதம் கொள்கையில்
அதென்ன.....

வான் மறைக்க விழையும்
பொழியாத மேகத்தில் சிறு
மின்னல் கீற்றென.....நரைமுடி!

இதயத்தில் இடி இறங்கியது!

அனிச்சை செயலாய்
கை அதை களையெடுக்க
பின்புதான் நினைவு வந்தது....
ஒன்றைஎடுக்க நிறைய வரும்
அமுதசுரபி நரைமுடியென யாரோ சொன்னது....!

நாட்கள் அதிகமாக
நரைமுடியும் இரண்டாய்...நான்காய்....!

காதோரத்தில்
நான்கு வெள்ளிமுடிகள்
பிறர் கவனத்தைக் கவர்கிறது
என்ற இறுமாப்பில் சில நாட்கள்...!

நான்கு வெள்ளிமுடிகளாலேயே
பிறரிடம் மரியாதை
அளவுக்கதிகமகிறதோ.....?
என்ற கவலை வர.....

வெள்ளிமுடியை
கார்மேகமாய் மாற்ற
ஏதோ ஒருசாயம் பூச.....
பூச வேண்டிய முடியின்
எண்ணிக்கை வளர்பிறையாய்....!

இப்போதெல்லாம்
கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு!!

திங்கள், 6 ஏப்ரல், 2009

காந்தி வழியில் நான்...??

வன்முறையில் இஷ்டமில்லை
என்றாலும்
வன்முறை நடக்கும்போது தடுக்காமல் வேடிக்கை
பார்த்து செல்லும் மக்களில்....
நானும் ஒருவன்!

உயிர்களைக் கொல்வது பாவம்
என்ற எண்ணம் இருந்தாலும்
உணவகங்களில் உறுத்தலில்லாது மாமிசம்
உண்ணும் ஜீவன்களில்
நானும் ஒருவன்!

காந்தியே....
புகைப்படத்திலிருந்து நீ
எனை குறுகுறுவெனப் பார்த்தாலும்....
எண்ணத்துக்கும் நடைமுறைவாழ்வுக்கும் உள்ள
இடைவெளியில் பழகிப்போன
பெரும்பான்மை சராசரிகளில்
நானும் ஒருவன்!

நீ....
உபயோகித்த ஒற்றை ஆடை
தடி, கண்ணாடி
இவைகளே
சுத்திக்கடியில் சிக்கி
விலைபோய் விட்டன!

நல்லவேளை....

உன் கொள்கைகளோ சிந்தனைகளோ
லாபம் தரும் ஏலப் பொருளாகவில்லை!

உன் வழிவந்தோரும்
உன் பெயரில் அரசியல் பிழைத்தோருமே
கவலைப்படாத அவற்றை
பின்பற்றுவதால் லாபமில்லை என்ற
தனிமனித சிந்தனையே மேலோங்கி நிற்கையில்....

ரூபாய் நோட்டில் பார்க்கும்
உன் சிரித்த முகம் கூட....
எங்களை எள்ளி நகையாடுகிறது!

எனினும்
வெட்கமின்றி மகிழ்கிறோம்
உன் சிரிப்பைக் கண்டு!












தன்னம்பிக்கை

வண்ணங்களை
சலவை செய்ய
சம்மதிப்பதில்லை
வானவில் மழையிடம்!

முட்களில்
அமர்ந்திருக்கும்போது
சிரித்த ரோஜா
பறித்ததும் வாடியது

இரைகளுக்காக
இறக்கைகளைப்
பறிகொடுப்பதில்லை
எப்போதும் பறவைகள்!

வீழந்ததற்காகத்
தேங்கிவிடுவதில்லை
ஒருபோதும்
அருவி!

நடப்பதற்கும்
கடப்பதற்கும்
பாதைகள் எதற்குப் புதிதாய்
பாதங்கள் போதும்!