செவ்வாய், 20 ஏப்ரல், 2010

பசுமைக்கு மாறுவோம்!


இன்றைய தினங்களில் நாம் 'Go Green' என்ற வார்த்தையை அதிகளவில் கேட்கிறோம்.ஆனால் அதைபற்றிய விழிப்புணர்ச்சியோ பாலிதீன் பைகளை உபயோகிக்காமல் சணல்,நார் போன்றவற்றால் உருவாக்கப்படும் பைகளையே பயன்படுத்த வேண்டும் என்ற அளவில் மட்டுமே உள்ளது.உண்மையில் நாம் பயன்படுத்தும் வாகனங்கள்,வீட்டு சாதனப் பொருட்கள் மற்றும் சுத்தப்படுத்தும் பொருட்களிலிருந்து வெளிவிடப்படும் நச்சு வாயுக்களால் நாம் வாழும் பூமி வெப்பமடைகிறது.இதனால் தட்ப ,வெப்ப நிலைகளிலும் மாறுதல் ஏற்பட்டு உலகம் வெப்பமயமாதல் (Global Warming) ஏற்படுகிறது.எனவே இயற்கையை மாசுபடுத்தாமல்,இயற்கையை அழிக்காமல் வாழ வேண்டும் என்பதைத்தான் 'பசுமைக்கு மாறு'(Go Green) என்கிறோம்.நாம் தினசரி வாழ்வில் ஒருசில விஷயங்களை கடைபிடித்தாலே உலகம் மேலும் வெப்பமடைவதை தடுக்க முடியும்.

1.மின்விளக்குகளை மாற்றுங்கள்:
நாம் பயன்படுத்தும் மின்விளக்குகளால் வெளிவிடப்படும் கார்பன் இரண்டு கார்களில் இருந்து வெளிவிடப்படும் கார்பனுக்கு சமம்.எனவே உங்கள் மின்விளக்குகள் ஃ ப்ளோரசென்ட்(fluorescent) வகையை சார்ந்ததாக இருக்கட்டும்.இது உங்கள் மின்சாரக் கட்டணத்தை குறைக்கவும் செய்யும்.

2.'Energy Star' தரம் கொண்ட பொருட்களை வாங்குங்கள்:
பல மில்லியன் கார்கள் வெளிவிடும் புகை எப்படி வாயுமண்டலத்தையும், சுற்றுப்புற சூழலையும் பாதிப்படையச் செய்கிறதோ, அதையேதான் நீங்கள் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டிகளும், துணி துவைப்பான்களும், தொலைகாட்சிப் பெட்டியும் செய்கின்றன.எனவே இவற்றை பயன்படுத்தும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் இணைப்பை முற்றிலுமாக துண்டித்து விடுங்கள்!இப்பொருட்கள் புதிதாக வாங்கும் பட்சத்தில்,முடிந்தவரை 'Energy Star' தரம் உள்ளதா என்று பார்த்து வாங்குவது இன்னும் நலம்.ஏனெனில் அவை குறைந்த அளவிலான நீரை பயன்படுத்துகின்றன;மிகக் குறைவான கதிர்களை வெளிவிடுகின்றன.

3. குளியல் நேரத்தை சுருக்குங்கள்:
நம் நாட்டில் சில பகுதிகளில் தண்ணீர் பஞ்சமும், சில பகுதிகளில் அதிகளவில் நீர் வளமும் இருந்து வருகிறது; பற்றாக்குறையான பகுதிகளில் வாழும் மக்கள் ஒரு வாளி நீரில் ஒரு தினத்தை முடிக்க வேண்டிய அவசியத்திலும், வளமான நீர்ப்பரப்பில் வாழும் மக்கள் குளிப்பதற்கே 75 முதல் 100 காலன் நீரை உபயோகிக்கின்றனர்.எனவே நீரை வீணாக்காமல் நீர் வசதியில்லா கிராமங்களுக்கு பங்கிட்டுக் கொடுப்பதன் மூலம் நாட்டின் எல்லாப் பகுதிகளும் சமச்சீர் வளம் பெற்று பசுமையாகக் காணப்படும். அதற்கு முதலில் உங்கள் குளியல் நேரத்தில் 5 நிமிடங்களுக்கு செலவிடப்படும் நீரை குறையுங்கள்; நிமிடத்திற்கு 2.5 காலனுக்கு குறைவான நீரை வெளியேற்றும் நீர்க்குழாய்களைப் பயன்படுத்துங்கள்.நீர்க்குழாய் உங்கள் வாளியை நிரப்புவதற்கே 20 நிமிடங்கள் பிடிக்கும்போது உங்களால் அதிகளவு நீரை செலவு செய்ய முடியாது என்பது நிச்சயம்!

4. வடிகட்டிய குழாய் நீரையே குடியுங்கள்:
இன்றைய தினங்களில் மக்கள் தங்கள் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் புட்டிகளில் அடைக்கப்பட்ட நீரையே காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்; இதனால் பிளாஸ்டிக் உற்பத்திக்காகவும், அவற்றை கடைகளுக்கு கொண்டு வருவதற்காகவுமான செலவுகளைதான் அதிகப்படுத்துகின்றனர்; தவிர பிளாஸ்டிக் உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலம் சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துவதிலும், மண்ணின் நலனைக் கெடுப்பதிலுமே முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.எனவே உங்களை சுற்றியுள்ள, நீங்கள் வாழும் இயற்கையை கெடுக்காத வண்ணம் உங்கள் வீட்டுக் குழாயில் வரும் நீரையே கொதிக்க வைத்தோ அல்லது சுத்திகரித்தோ பயன்படுத்தலாமே!

5. நச்சுத் தன்மையற்றப் பொருட்களை உபயோகித்தல்:
உங்கள் குளியலறையையும்,சமையலறையையும் சுத்தம் செய்வதற்காக நீங்கள் பயன்படுத்தும் பீனைல் போன்றவற்றைத் தவிர்த்து 'eco friendly' என்ற முத்திரையுடன் கூடியப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் குடும்பத்திற்கும்,குழந்தைகளுக்கும்,செல்லப் பிராணிகளுக்கும் எதிர்பாராவிதமாக நடக்கும் விபத்துகளைத் தடுக்கலாம்.முடிந்தால் உங்கள் சொந்த முயற்சியிலேயே தூய்மை செய்யும் பொருட்களைத் தயாரித்துக் கொள்ளலாம்.வெள்ளை வினிகரையும் சமையல் சோடாவையும் கலந்து குளியலறையை சுத்தம் செய்து பாருங்கள்;பளீரென்ற சுத்தத்துடன் பாராட்டும் கிடைக்கும்(பணத்தைமிச்சப் படுத்தியதற்காகவும்) !ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்!

6. மறுசுழற்சி முறையில் உபயோகித்தல்:
பிளாஸ்டிக் பைகள்,பிளாஸ்டிக் பொருட்கள் இவற்றின் உபயோகத்தைக் குறைப்பதாலும்,சரியான மறுசுழற்சி முறைப் பொருட்களை(recyclable or reusable) உபயோகிப்பதாலும் சுற்றுப்புறத்திற்கு கிடைக்கும் நன்மைகளோ அளவிட முடியாதது.உதாரணத்திற்கு,கடைகளில் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் பைகளையோ அல்லது காகிதப் பைகளையோ உபயோகிப்பதன் மூலம் மண்ணின் வளத்தை பாதுகாக்கிறோம்.மாறாக உபயோகித்த பிளாஸ்டிக் பைகளை மண்ணில் புதைப்பதன் மூலம் மண்ணின் நீர் மற்றும் இன்ன பிற வளங்களுக்கு தடையாகிறோம்;எரிப்பதன் மூலம் ஓசோனின் ஓட்டையை பெரிது படுத்துகிறோம்.
உயர்தர உணவகங்களிலும்,திருமணம் மற்றும் விருந்துகளிலும் பயன்படுத்தப்படும் காகிதத் துடைப்பான்களுக்குப்(paper napkins) பதிலாக நார்த் துடைப்பான்களை(fiber napkins) பயன்படுத்துவதன் மூலம் ஒரு மில்லியன் மரங்கள் பாதுகாக்கப்படும்.இப்படி மரங்களை வெட்டாமல் காப்பதன் மூலம் 'பச்சை வீட்டு வாயு'வான ஆக்சிஜன் அதிக அளவில் நமக்குக் கிடைக்கும். இதனால் நீங்கள் இயற்கையின் நண்பனாகி விடுகிறீர்கள்.
அரசாங்கமும் 'சுழல் முறைபடுத்தும் குப்பைத் தொட்டி'களை(recyclable dustbin) ஒவ்வொரு வீதிக்கும் கொண்டுவர வேண்டும்.இதன் மூலம் மக்கள் தங்கள் வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் புட்டிகள்,பழைய அலைபேசிகள்,பழைய மின்சாதனப் பொருட்களை சரியான முறையில் அப்புறப்படுத்தும் விழிப்புணர்ச்சியைப் பெறுவர்.

7. நம் ஊரில் கிடைக்கும் உணவையே உண்ணுங்கள்;
பெரும்பாலான நகர்புறவாழ் மக்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்கள்,காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர்.அவைதான் சுத்தத்திலும்,அதிக சத்து நிறைந்தவை எனவும் நம்புகின்றனர்.உண்மையில் அப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அதிகளவில் காற்று மாசுக்களுடனே கிடைக்கின்றன.எனவே நம் நாட்டில் நம் ஊரில் விளையும் காய்களையும் ,பழங்களையும் சாப்பிடுவதன் மூலம் நம் உடல் நலன்,சுற்றுப்புற நலன் மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார நலனும் பெருகும்.

8. மெதுவாக சீராக செல்லுங்கள்:
நீங்கள் நான்கு சக்கர வாகனத்தில் 60 m.p.h- க்கு மேல் செல்பவரா? 60 m.p.h-க்கு மேல் செல்லும் ஒவ்வொரு 5 m.p.h-க்கும் லிட்டருக்கு 15 ரூபாய் அதிகமாக செலவு செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.அதிகமான வேகம் மற்றும் அடிக்கடி வேகத்தடையை அழுத்துதல்(break) இரண்டுமே உங்கள் வாகனத்தின் செயல்திறனை குறைக்கும்.எனவே மிதமான வேகத்தில் ஒரே சீராக செல்வதால் பெட்ரோல் செலவு குறையும்.

9. இருபக்கங்களிலும் அச்சிடுங்கள்:
நீங்கள் வீட்டிலோ,அலுவலகத்திலோ காகிதத்தில் கணினி மூலம் அச்சிடும் போது இரு பக்கங்களிலும் அச்சிடுங்கள்.முடிந்தவரை மின்னஞ்சல் மற்றும் கோப்புகளில் செய்திகளை கணினியிலேயே சேகரித்து வைத்துக் கொள்வது மிக நன்று.

10.மரம் நடுங்கள்:
உங்கள் வீட்டை சுற்றி குறைந்த பட்சம் மூன்று மரங்களையாவது நடுங்கள்.இது உங்களின் வீட்டை குளுமையாக வைத்திருப்பதுடன் கோடைக்காலங்களில் உங்களின் காற்றாடியாக செயல் புரிந்து உங்களின் உங்களின் மின்கட்டணத்தில் 25 சதவிகிதத்தைக் குறைக்கும்.

11.சொந்த மண்ணிற்கேற்ற வாழ்க்கை வாழுங்கள்:
நீங்கள் பூச்செடிகளையும்,காய்கறிச் செடிகளையும் வளர்ப்பதில் ஆர்வமுடையவராக இருந்தால் உங்கள் ஊர் மண்ணின் வளத்தில் எந்த செடிகள் பயன்தருமோ அதையே வளர்ப்பதன் மூலம் அதிக உரங்களையோ,நீரையோ பயன்படுத்த அவசியமிராது.