செவ்வாய், 29 ஏப்ரல், 2014

எந்தன் தேசத்தின் குரல்...

ஏப்ரல் 26 அன்று நடந்த காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலில் சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் உள்பட மூன்று ராணுவ வீரர்கள் உயிர் நீத்தனர்.இந்த செய்தியை படித்து கடந்து விட்டவர்களுக்கு......

ஒவ்வொரு முறையும் போரில்,எல்லையில்,நாட்டுக்குள் என்று உயிர் துறக்கும் ராணுவ வீரர்களைப் பற்றி படிக்கும் போது கண்கள் பனிப்பதுடன் மட்டுமே  நாட்டுப்பற்று நின்றுவிடுகிறது.இந்த முறையும் அப்படிதான்!ஆனால் என் வயதையொத்த ஒரு பெண் நாட்டுக்காக கைபெண்ணாய் ஆனால் முகத்தில் ஒருவித ஏற்புதலுடன் ;என் மகள் வயதிலுள்ள ஒரு குழந்தை அப்பாவின் சவப் பெட்டிக்கு அருகில் எப்போதும் போல் சிரிப்புடன்!இந்தக் காட்சி மனதிற்குள் வலியாய் ....உயிருக்குள் ரணமாய்...!

உயிர் நீத்தது மூன்று பேர்!இந்த ஒருவனை நான் குறிப்பிட்டு எழுத காரணம்...என் தாய்மொழி பேசும் ஒருவன் 22 மொழிகளை உள்ளடக்கிய பரந்த எம்  தாய்மண்ணிற்காக உயிர் தியாகம் செய்திருக்கிறான்.இவனைப் போன்றோர்களை யாம் எப்படி கவுரவிப்போம்?

இந்திய சுதந்திரத்தைப் பற்றி நினைத்தாலே "தண்ணீர் விட்டா வளர்த்தோம் ; எங்கள் செந்நீர் விட்டல்லவா வளர்த்தோம்!" என்ற வீர உரை நெஞ்சத்தை பிசையும்.அப்படி செந்நீர் விட்டு வளர்த்தெடுத்த தேசம் அரசியல்வாதிகளிடம் மீண்டும் அடிமையாயிருக்கையில் இன்னும் தம் செந்நீரை சிந்தி எம் சுதந்திரத்தை உறுதி செய்யும் எம் உடன்பிறப்புகளுக்கும் அவர்கள் குடும்பத்தாரின் தியாகத்திற்கும் எப்படி மரியாதை செய்வோம்?எல்லையில் எதிரியை விரட்டியடித்து தேவைப்பட்டால் தம் இன்னுயிரையும் தந்து நம் அமைதி வாழ்வை உறுதி செய்யும் வீரனுக்கு நாம் செய்யப் போகும் கைம்மாறு என்ன?

நாட்டுக்குள் சுற்றும் எதிரிகளான லஞ்சம்,ஊழலுக்கு துணை போகாமல், விளை  மண்ணை வீட்டு நிலமாக மாற்றாமல்,குடிப்பழக்கத்தை விடுத்து பின் வரும் தலைமுறைகளை காப்பாற்றி,மற்ற உயிர்களுக்கு மதிப்பளித்து, சிறியதேயானாலும் தானம் அளித்து வாழ்ந்தோமேயானால் நாமும் நாட்டுப்பற்று உடையவர்களே!சிந்தனை செயல்களாகும்;செயல்கள் பழக்கங்களாகும்;பழக்கங்கள் ஒரு கலாச்சாரமாகும்;ஒரு கலாச்சாரம் அடுத்த தலைமுறையை வளர்த்தெடுத்து பாதுகாக்கும்!

கரிகாலனும், இராச ராசனும் வாழ்ந்த எம் புனித தேசத்தில் கரை(றை ) வேட்டிகளே வாழ்கிறார்கள்!நல்லவர்கள் உயிர் தந்து காக்கும் நம் தேசத்தை கொள்ளையர்கள் கையில் விட்டு வைக்காமல் இனி அரசியலை நம் குழந்தைகளுக்காவது சொல்லிக்கொடுப்போம்;நேர்மையான தேசத்தை உருவாக்க விதைப்போம் நெஞ்சில்!