சனி, 6 ஜூலை, 2013

சாதிகள் இல்லையடி பாப்பா!

சமீபத்தில் பத்திரிகைகளில் வந்த இளவரசன்-திவ்யா காதல் தம்பதிகளின் வழக்கு,திவ்யாவின் திடீர் மனமாற்றம்,இறுதியில் இளவரசனின் மரணம் என்ற தொடர் நிகழ்வுகள் நம் கவனத்தை ஏதோ ஒரு வகையில் கலைத்திருக்கும் .அநேகமாக நாம் தற்கொலை செய்து கொண்ட இளைஞனின்  மனமுதிர்வற்றத் தன்மையை சாடியிருப்போம்;அல்லது திடமற்ற முடிவால் இரு உயிர்களை பலி கொண்ட திவ்யாவை வசைபாடியிருப்போம்.

உண்மையில் மனமுதிர்வற்றவர்கள் யார்?காதலித்தவர்களா?காதலை மறுத்து அவர்களைப் பிரித்தவர்களா?பா.ம.க தலைவர் ராமதாசு அவர்கள் கருத்துப்படி 'நாடகக் காதலாகவே' இருக்கட்டும்;அவர்களது பெற்றோர் 'வேலை கிடைத்தபின் திருமணம்' என்று ஏதாவது காரணத்துடன் அவர்களை காத்திருக்க வைத்து காதலின் உணமைத்தன்மையை அறிந்திருக்கலாம் அல்லவா?காத்திருக்க வைத்திருந்தாலே அவர்கள் தங்களுடைய முடிவுகளை மறுபரிசீலனை செய்ய உதவியிருக்கும்.அதை விடுத்து இரு குடும்பங்களின் தனிப்பட்ட விசயத்தில் சாதிக் கட்சிகளை நுழைய அனுமதித்து,சாதிப் பெயரைக் கெடுத்ததாய் தகப்பனார் உயிரை மாய்த்துக் கொண்டு, உணர்வுகளின் அடிப்படையில் தாய் மகளை மடக்கி சாதித்தது... இன்னும் ஒரு உயிரை பலி கொண்டதே!இதுபோல் ஒன்றிரண்டு சம்பவங்கள் ஊடகங்களின் துணையால் வெளிவருகின்றன.ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு சாதியிலும்,மதத்திலும் நடந்தவண்ணம் உள்ளது.எனக்குத் தெரிந்து வேற்று சாதியினனை காதலித்த மகளை கொன்ற தாய்;வேற்று மதத்தினனை மணந்த மகளை 'காதல்' பட பாணியில் இழுத்து வந்து மறுமணம் செய்வித்த தந்தை என்று நான் சார்ந்த சமூகத்தில் ஏராளமான விஷயங்கள் நடந்ததுண்டு.காதல் பதின்பருவத்தை கடக்கும் அநேகமானவர்களுக்கும் வரக்கூடிய ஹார்மோன் விளைவுதான்.இதை உடல் மற்றும் மனம் சார்ந்த நிகழ்வாகப் பாராமல் தான் சார்ந்த சமூக மற்றும் சாதி,மத கலாச்சாரங்களின் அழுத்தங்களாக உணர்வதாலேயே அனைத்துப் பெற்றோர்களும் மறுப்பை மட்டுமே பதிவு செய்கின்றனர்.இது மட்டுமல்லாமல் தான் பெற்ற பிள்ளைகள் தமக்கு  உடமை என்று கருதுவதாலும் அவர்கள் தன்னுடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்க கடமைப்பட்டவர்கள் என்கிற ரீதியில் 'நான் பார்க்கும் மாப்பிளையை/பெண்ணைதான் நீ திருமணம் செய்ய வேண்டும்' என்ற தம் முடிவை அவர்கள் மீது  திணிக்கிறார்கள்.மாறாக பிள்ளைகளின் ஆசைகளுக்கு மதிப்பு கொடுத்து,கால அவகாசம் எடுத்துக் கொண்டு அவர்களுடைய மகிழ்ச்சிக்கு ஆவண செய்தால் இந்த சாதிச்சணடைகள் தாமாகவே ஒரு முடிவுக்கு வரும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக