வெள்ளி, 22 மார்ச், 2013

மென்மையான 'குடி'மகன்கள் கவனிக்க!!

விஜய் டிவி-ல்  ஒரு நிகழ்ச்சியில்  குடிப்பழக்கத்தால் தனிமனிதனில் ஏற்படும் மாற்றம் அதனால் சமூகத்தில் நிகழும் அவலங்களைப் பற்றிய அலசல் நடைபெற்றது.அதில் கலந்துரையாடப்பட்ட பல விசயங்கள்  அதிர்ச்சிகரமானவையாகவே இருந்தன.பெரும்பாலும் நாம் அனைவருமே குடிப்பழக்கம் என்றால் குடித்துவிட்டு மனைவியை அடிக்கும் கணவன்மார்களையோ,சாலையோரத்தில் நெகிழ்ந்த ஆடைகளோடு மயக்க நிலையிலிருக்கும் 'மொடா குடிமகன்களையோ'  நினைத்துக் கொள்கிறோம்! அதாவது குடிக்கும்  நமக்கும் தொடர்பில்லாதது போலவே காட்டிக்கொள்கிறோம்.உண்மையில் மொடாக் குடிமகன்கள் சுமார் 5 முதல் 10 சதவிகிதத்தினரே!ஆனால் இன்று corporate world என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் பல பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளே நம் நாட்டில் பல குடிமகன்(ள்)களை  உருவாக்குகிறது என்பதே கசப்பான உண்மை!1930-களில் சராசரியாக ஒரு ஆண் மகன் 27 வயதில் மதுவுக்கு அறிமுகமானான்.இன்று குடிப்பழக்கம் ஆரம்பிக்கும் சராசரி வயது 20 என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.12.7% பேர் பள்ளிபருவத்திலேயே மதுப்பழக்கத்தை ஆரம்பித்து விடுகின்றனராம்!1990-களில் ஆண்டுக்கு 3 கோடியாக இருந்த TASMAC-ன் வருமானம் இன்று 18 கோடியாக  உயர்ந்துள்ளது எதைக் குறிக்கிறது?   20 அல்லது 21 வயதிலேயே  ஐந்து இலக்க எண்ணில் வருமானம் தரும் பன்னாட்டு நிறுவனங்களின் வேலை வாய்ப்பால் இரவு நேர விருந்து என்ற கலாச்சாரம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகி விட்டது.எனவே மதுவும் மிக சுலபமாகிவிட்டது.மது அருந்துவதால் நினைத்ததை பேசுவதற்கான தயக்கம் விலகுகிறது;உயர் அதிகாரிகளுடன் இணக்கமாக பேச முடிகிறது;அலுவலக வேலைச் சுமையால் ஏற்படும் மன அழுத்தம் குறைகிறது இப்படி பல காரணங்களைக் கூறிக் கொண்டு தங்களை social drinker என்று அடையாளப்படுத்துகின்றனர் நம் குடிமகன்கள்;அதாவது தாங்கள் 'மென்மையான குடிமகன்கள்';சாலையோரம் புரளும் ரகம் அல்ல என்று அங்கீகாரம் தேடுகின்றனர்.மென்மையான குடிப்பழக்கம் தவறில்லை என்று கொள்கைப் பிரச்சாரம் செய்து கொள்கின்றனர்.ஆனால் இங்குதான் ஆபத்து ஆரம்பிக்கிறது.ஆரம்பத்தில் இந்த   மென்மையான  குடிமகன்கள் குறைந்த அளவிலேயே மது அருந்தினாலும் மன அழுத்தம் மிகும் காலம்,அதிகமாக சம்பாதிக்கும் போது  என்று குடிப்பதற்கான காரணங்களை அதிகப்படுத்துகின்றனர்.பின் தங்களை அறியாமலே மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்.ஆனால் தான் மிகுந்த கட்டுபாட்டில் இருப்பதாகவும் தான் நினைத்தால் சுலபமாக விட்டுவிட முடியும் என்றும் ஆழமாக கருதுவதால் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மது அருந்தினால் கூட 'நான் அளவுக்கதிகமாக மது அருந்துவது கிடையாது' என்றே நம்புகின்றனர்.மது அருந்துவதால் தற்காலிக தைரியம் பிறந்தாலும் காலப்போக்கில் அடுத்தவர் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்து விடுகிறது.உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் மதுவின் தீமைகள் பற்றி அறிந்திருந்தும் நம் சமூகம் வேகவேகமாக அழிவுப்பாதையையேத் தேடி போய் கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனையான விசயம்.

Corporate சகாக்கள் விழித்துக் கொள்வார்களா??!!