ஞாயிறு, 8 டிசம்பர், 2013

உன்னைப் போல் ஒருவன் !

ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸை விட பெரும்பான்மை!-இதை கேட்டதும் முதலில் எனக்கு ஆச்சரியம்தான்!கேஜ்ரிவாலைப் பற்றி அதிக அபிப்ராயம் ஏற்பட்டதில்லை காரணம் அவர் அன்னா ஹசாரேவின் செயல்பாட்டுக் குழுவிலிருந்து வெளியே வந்தவர்;ஹசாரேயின் போராட்டங்கள் நிகழ்த்திய எழுச்சி சில மாதங்களிலேயே பிசுபிசுக்கத் தொடங்கிய காரணமும் புரியாததால் அவரிடமிருந்து வெளிவந்த கேஜ்ரிவால் மீதும் எந்த தாக்கமும் என் மனதில் ஏற்பட்டதில்லை! 'ஹசாரேயை விட்டு விலகல்;அரசியல் பிரவேசம்' என்ற தொடர்ந்த ஊடக வெளிச்சத்தில் இருந்ததாலும் நன்மதிப்பு ஏற்படாதிருந்திருக்கலாம்!ஊழலற்ற அரசு என்பது நம் எல்லோருடைய கனவாக இருந்தாலும் அது ஒன்றை மட்டுமே வலியுறுத்துவதில் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு விளையப் போகும் நன்மை என்னவாக இருக்க முடியும்?
   டெல்லியில் பா.ஜ.க ஆட்சி அமைத்தாலும்,வலுவான எதிர்க்கட்சி நிலையில் ஆம் ஆத்மி!இன்று கேஜ்ரிவாலின் பேட்டியைப் பார்த்தபோது மிக வித்தியாசமாக தெரிந்தார். " டெல்லி முழுமைக்கும் ஒரே விதமான வாக்குறுதிகளைக் கூறுவதன் மூலம் எல்லாத் தரப்பினருக்கும் தேவையானது கிடைக்கப் போவதில்லை.எனவே 70 தொகுதிகளுக்கும் 70 விதமான பட்டியல் தயாரித்து மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்"-இதுதான் அவருடைய எளிமையான ஆனால் மிகச்சரியான வார்த்தைகளாக இருந்தது.தேவையைத் தவிர தேவையற்றவைகள்தான் இன்று நமக்கு அதிகமாகக் கிடைக்கின்றன.எனவே அத்தியாவசத்தின் முக்கியத்துவத்தை நோக்கி மக்களை நகர்த்தும் இந்தக் குடிமகன் சிறந்த தலைவனாக மனமார வாழ்த்துவோம்!



திங்கள், 2 டிசம்பர், 2013

களையெடுக்க வேண்டிய கலாச்சாரம்???!!!

நான் இன்று 'பாண்டிய நாடு' திரைப்படத்தைப் பார்த்தேன்.நடுத்தர வர்க்க,பாசமிக்க யதார்த்தமான ஒரு குடும்பத்தின் தலைமகனை ஒரு அதிகார வர்க்கம் கொலை செய்து விடுகிறது.அதற்காக ஒருபுறம் பழிவாங்கத் துடிக்கிறான் தம்பி;மறுபுறம் தன மகனை இழக்க நேர்ந்ததற்கு காரணமானவனை கொல்வதற்கு தன்  வீட்டை அடமானம் வைத்து கூலிப்படை அமர்த்துகிறான் தகப்பன்.இறுதியில் இளவல் தன தமையனின் கொலைக்கு காரணமானவர்களின் உயிர்களை பலி கொள்கிறான்.தகப்பனாரின் நெஞ்சம் ஆனந்தத்தில் நிம்மதி கொள்கிறது,இதுதான் கதை!
           இப்படத்தில் இறந்த மகனுக்காக உருகும் அப்பாவின் நடிப்பில் நெகிழ்ந்த மனம் அவரின் பழிவாங்கும் எண்ணத்தில் நெருட ஆரம்பித்தது.'பழிவாங்குதல்' என்பது ரவுடிகளுக்கு மட்டுமே பொருந்துகிற விசயமா? ஏன் சாதாரண மக்களுக்கு ஏற்புடையதில்லையா என்று தோன்றலாம்; பாதிக்கப்பட்டவர்களுக்குதான் அந்த வேதனையின் வலி புரியும் என தர்க்கமும் செய்யலாம்.உண்மைதான்,தன்னுடைய இரத்த பந்தத்தை அந்நியர் ஒருவர் அடித்துவிட்டால் ஏன் வாய்வார்த்தையாக திட்டிவிட்டாலே நமக்கெல்லாம் கோபம் தலைக்கேறுகையில் -உயிரே போய்விட்ட நிலையில் பதிலுக்கு உயிரை வாங்க வேண்டும் என்ற உத்வேகமும் இயற்கைதானே!இரத்தத்திலேயே உறங்கும் பழிவாங்கும் உணர்வு படைத்தவர்கள்தானே மானிடர்கள் .......!
            இது போன்ற  நிகழ்வுகள் வடசென்னை ,மதுரை மாவட்டங்களிலேயே நடைபெறுவதாக திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது கவனிக்க வேண்டிய விஷயம்!மற்ற மாவட்டங்களில்(ஒரு சில தென் மாவட்டங்களைத் தவிர) இது போன்ற உக்ர சம்பவங்கள் அதிகம் இல்லை என்பதுதான் நான் கூற வந்தது.வடசென்னைவாசிகளின் நிறை குறை மதிப்பீடுகள் யாம் அறியேன் .ஆனால் மதுரை என் புகுந்த வீடு;பொதுவாகவே மதுரைக்காரர்களை பற்றின ஒரு கருத்து "கொஞ்சம் முரட்டுக்குணம்;ஆனால் பாசக்காரர்கள்".எனக்கு இதில் ஒருவிதமான மாற்றுக்கருத்து உண்டு;பாசத்தில் எங்கிருந்து முரட்டுத்தனம் வர முடியும்?ஆனால் அவர்களெல்லாம் அப்படிதான் என்ற என் கணவரின் விளக்கம் இன்றுவரை புரியாதது! 'நாங்களெல்லாம் எப்புடி?' என்ற வசனத்தை நகைச்சுவையாக கூறும் வடிவேலு-க்களையும் மதுரையில் பார்க்கலாம்;அதே வசனத்தை திமிருடன் கூறும் ரவுடிகளையும் அங்கு பார்க்கலாம்!இதுவும் ஒரு மதுரைகாரரின் வாக்குமூலமே!அடியேனுடையது அல்ல!
             இது இந்த மண்ணின் பழக்கம்,இது இந்த மண்ணின் வரலாறு என்று கூறிகூறியே இம்மாவட்டங்கள் வன்முறையையும் சேர்த்தே பல தலைமுறைகளுக்கு கடத்தி வந்து விட்டனர்; இதுதான் உண்மை! அதையே படமாக  எடுத்தும் தங்களின் ஊர்ப்பெருமையாக அறிவிக்கின்றனர் .இப்படிப்பட்ட படங்கள் தேசீய விருதைப் பெறுவதும், இதனால் அதையே மற்ற இயக்குனர்கள் கதைக்களமாக்குவதும்...என்னத்த சொல்ல?
             'பொய் புள்ள குட்டிகள படிக்க வைங்கடா' என்ற தேவர்மகன் வசனம் பதித்த அழுத்தம் இன்னும் எந்த தென் மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தாத போது எதுக்கு இந்த வெட்டி ஊர் கலாச்சாரம் பேசும் படங்கள் ??