திங்கள், 29 மார்ச், 2010

கல்வி சீர்திருத்தத்தின் அவசியம்!!

நம் முதல் பாரதப் பிரதமர் நேரு தொடங்கி நம் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் வரை இந்தியாவின் சிற்பிகள் என்று மாணவர்களைத்தான் அடையாளம் காட்டுகின்றனர். அப்படிப்பட்ட இளம்தூண்கள் உருவாக்கப்படும் பள்ளிக்கூடங்களும், உருவாக்கப்படும் முறையும் இன்றுவரை எவ்வித மாற்றமும் பெறாத நிலையிலும் கூட இந்தியா வல்லரசாகுமா? போன்ற கேள்விகளுடன் வளரும் நாடாக வளர்ந்து கொண்டே இருக்கிறோம்!குழந்தைத் தொழிலாளர் முறைக்கு தடைவிதித்து சட்டமியற்றப்பட்டும் முற்றிலும் அம்முறை ஒழிக்கப்படவில்லை; வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் குழந்தைகளும் படிக்க வேண்டும் என்று இலவசக்கல்வி முறையைக் கொண்டு வந்தாலும் கூட கற்பிக்கும் அரசுப் பள்ளிக்கூடங்களோ இலவச உணவு, உடை வழங்கும் முகாம்களை போல்தான் செயல்படுகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்!பணமிருந்தாலும் இல்லாவிட்டாலும் குழந்தை நன்கு படிக்க வேண்டுமென்றால் தனியார் பள்ளிக்கூடங்களில் சேர்த்தால்தான் உண்டு என்ற நிலையில்தான் நாம் உள்ளோம். இதை தெளிவாக தெரிந்து கொண்டுவிட்ட தனியார் பள்ளிகளோ அவர்கள் விருப்பத்திற்கேற்ப கல்விக் கட்டணத் தொகையை ஏற்றி கல்வியை வியாபாரமாக்கிவிட்டனர். இது பற்றாது என்று பள்ளியில் சேர்த்துக் கொள்வதற்கே லஞ்சம் வாங்கும் அளவுக்கு தனியார் பள்ளிகளை கொழுத்து வளர விட்ட பெருமை அரசுக்கும், சிறிது வசதி படைத்த மக்களுக்குமே சேரும்.இவர்களை விடுங்கள்! கடனை வாங்கியாவது தங்கள் குழந்தையை குறிப்பிட்ட தனியார் பள்ளியில் சேர்த்துவிடத் துடிக்கும் பெற்றோர்களை என்னவென்று கூறுவது?அவர்களையும் குறை கூற முடியாது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெறுவது தனியார் பள்ளி மாணவர்களே! நுனி நாக்கு ஆங்கிலமும் அவர்களுக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது. அப்படியே அரசுப்பள்ளிகளில் படித்து தொழில் சார்ந்த படிப்புகளுக்கு சென்றாலும் அங்கும் சமாளிக்க முடியவில்லை.ஆங்கிலத்தில் படித்து எழுதுவதற்கான மொழித்தடங்கல்; மற்ற மாணவர்களின் மொழிப்புலமையை ஒப்பிட்டு தாழ்வு மனப்பான்மை.[தாய்மொழிவழிக் கல்வி முக்கியம்தான்,ஆனால் 'ஒரு மொழியை மற்றொரு மொழி ஆதிக்கம் செய்யக்கூடாது' எனும் முதல்வர் கருணாநிதியின் தற்போதைய(?!) ஆலோசனையையும் கருத்திலேற்றினால் இன்னும் நலமே!] இப்படி அரசுப்பள்ளி மாணவர்களின் நிலை பரிதாபமாகத்தான் உள்ளது.இதற்கெல்லாம் அடிப்படை காரணம் என்ன?சிந்தித்துப் பார்த்தால் அரசின் நடவடிக்கையில் சற்று மாற்றம் தேவை என்பது மட்டும் புரிகிறது. இரண்டு தலைமுறைகளுக்கு முன் பத்தாம் வகுப்பு படித்தவர்களே ஆசிரியர்களாய் இருந்திருக்கிறார்கள் ; இளங்கலை பட்டம் முடித்தவர்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராய் இருந்திருக்கிறார்கள். இப்படி அவர்களுடைய தகுதி வெறும் 'கல்வியின் அடிப்படை ' என்று வேலை வழங்கியிருக்கிறார்களேத் தவிர தரத்தின் அடிப்படையில் அல்ல. மற்ற துறைகளில் வேலை வாய்ப்பை பெற அந்நிறுவனங்கள் மூன்று முதல் ஐந்து சுற்றுகள் வரை நேர்காணல்களை நடத்தி தேர்வு செய்யும் போது,ஒரு சமூகத்தின் அடிப்படை கல்வியையே அளிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட ஒரு பட்டய படிப்புடன் தகுதி நிறைவடைந்து விடுவது ஆச்சரியமாகவும் சற்று வருத்தமாகவும் உள்ளது. பெரும்பாலான ஆசிரியர்களுக்கு புத்தகத்தில் உள்ளவற்றை மனப்பாடம் செய்தோ அல்லது அப்படியே வாசித்தோ காண்பிப்பதுடன் கடமை முடிந்து விடுகிறது. மாணவர்களுக்கும் தேர்வில் புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே எழுதியிருந்தால் முழு மதிப்பெண் வழங்கப்படும் என்ற போதனை. புதுப்புது பாடத்திட்டங்கள் மாறும் போது ஆசிரியர், மாணவர் இருவருக்கும் மனப்பாடம் செய்வதில் போட்டி; மாலை நான்கு மணிக்கு பள்ளி மணியடிக்கும் முன்பே பையை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாராகும் ஆசிரியர்கள். இப்படி மாணவர்களுக்கு நிகராகவே ஆசிரியர்களும்! அதற்காக அனைத்து அரசுபள்ளிகளையுமோ, அனைத்து ஆசிரியர்களையுமோ குறைகூற முடியாது. ஆசிரியப்பயிற்சி படிப்பையே தவம் போல் படிக்கும் மாணாக்கனும் உண்டு; மாதம் தவறாத சம்பாத்தியம், இன்ன பிற சலுகைகளுக்காக படிக்கும் மாணாக்கனும் உண்டு. எங்கள் மாவட்டத்தில்(திருவாரூர்) நான் கண்ட சிறந்த அரசுப்பள்ளிகளும் உண்டு. ஆனாலும் 80% -க்கும் மேலான அரசுப்பள்ளிகள் மழைக்கால ஒதுங்குமிடமாகதான் உள்ளது.இந்நிலை மாறி வசதி படைத்தவர்களும் அரசுப்பள்ளிகளின் தரத்திற்காக தங்கள் குழந்தைகளை அங்கு படிக்க வைக்க முன்வர வேண்டுமானால் உயர்ந்த கட்டிடங்கள் மட்டும் போதாது; ஆசிரியர்களுக்கான பணி நியமனத்தின் போது ஐந்து சுற்றுகளுக்கும் மேலான நேர்காணலுடன், யார் சிறப்பாக வகுப்பெடுக்கும் திறமையுடையவர்கள் என்பதையும் வெளிக்கொணர்ந்து வேலை வாய்ப்பளிக்க வேண்டும்; புதிய பாடத்திட்டங்கள் மாறும் பட்சத்தில் அவர்களுக்கு பாடத்தை புரிந்து கொள்ளும் வகையிலும், மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் வகையிலும் விடுமுறைக் காலங்களில் சிறப்புப் பயிற்சி கொடுக்க வேண்டும். மேலும் ஆசிரியப் பயிற்சி படிப்பின் போதும் அவர்களை மாணவர்களாகவே பாவிக்கும் படிப்பை விடுத்து அவர்களுக்கு மேலாண்மை தகுதியை வளர்க்கவும், மாணவர்களை கவரும் விதத்தில் பேசவும், மாணவர்களின் மனதைப் புரிந்து கொள்ளும் வகையில் மனோதத்துவப் படிப்பையும் கற்றுத் தர வேண்டும். இன்றைய அரசியல் தலைவர்கள் யார், அவர்களுடைய பணி, கடமைகள், தேர்ந்தெடுக்கும் மக்களின் நலன்களுக்கு அவர் எவ்விதத்தில் பொறுப்பு என்பதையெல்லாம் மாணவர்களுக்கு கற்பிப்பவராக ஆசிரியர் இருக்க வேண்டுமாதலால் பயிற்சி படிப்பில் அரசியல் வேண்டும்.தொழில்துறை படிப்பில் கணினிவியல், மின்னணுவியல், தொழில்நுட்பவியல் போன்ற உட்பிரிவுகளில் பயிற்சி அளிப்பதை போல் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் போன்ற முதல்நிலை வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கு அவற்றிற்கான சிறப்புப் பயிற்சி அளித்தல் அவசியம். பயிற்சி படிப்பில் சிறந்து விளங்குபவர்களுக்கு பதக்கம் வழங்குவதோடு நிறுத்திவிடாமல், இத்தகுதிகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டால்தான் ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் என்று அறிவிக்க வேண்டும். வெறும் படிப்போடு நின்று விட்டவர்களுக்கு வேலை முதற்கொண்டு எவ்வித சலுகையும் கிடைக்க போவதில்லை என்பதை உணர்த்தினாலே உலகின் மிகச்சிறந்த ஆசிரியர்கள் நம் நாட்டவர்கள் என்ற நிலை தோன்றி விடும்.


தனியார்ப் பள்ளிகளைப் போலவே அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் சிறப்புப் பயிற்சி(மாலை நேர படிப்புத் திட்டம், வகுப்பில் கவனித்தவற்றை விளக்கும் திறன்) அளிக்க வேண்டும். தனியார்ப்பள்ளி மாணவர்களுக்கு நிகரான ஆங்கிலப் புலமையை பெற ஆங்கிலப் புத்தகங்களையோ, நாளிதழ்களையோ வாசிப்பதை ஊக்குவிக்க வேண்டும். ஆங்கிலத்தில் கலந்துரையாடல் போன்ற விஷயங்களுக்காக தினமும் 30 நிமிடங்கள் கட்டாயம் ஒதுக்க வேண்டும். அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அரசின் ஆராய்ச்சிக் கழகங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய செயல்முறை விளக்கத்தை நேரில் சென்று பெரும் சலுகைகளை அறிவிக்க வேண்டும்.


இன்றைய சூழலில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் ஆசிரியப் பயிற்சி படிப்புகளில் சேருகின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசும் அதிகமான பள்ளிகளைத் திறக்கிறது. அதிக அளவில் பள்ளிகள் திறக்கப் படுவதால் மாணவர்களின் அடிப்படைத் தேவைகளான கட்டிட வசதி, சோதனைச் சாலைக் கூடங்கள், நூலகங்கள் இல்லாமலே போய்விடுகிறது; ஏன் தூய குடிநீர் வசதியும், கழிப்பிட வசதியும் கூட இல்லாமல் பெயருக்குப் பள்ளிக்கூடங்கள் திறக்கப் படுகின்றன. எனவே இப்படி அதிக அளவில் செயல்படும் பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தாலே அவை தரத்துடன் செயல்பட உதவியாயிருக்கும். சின்ன சின்னதாய் 50 பள்ளிகள் இருக்கும் இடத்தில் 15 பெரிய, தரமான பள்ளிகள் போதுமானது. 50 பள்ளிகளில் 500 ஆசிரியர்கள் இருக்கும் பட்சத்தில் 15 பள்ளிகளில் பள்ளிக்கு 30 வீதம் 450 தரமான ஆசிரியர்கள் போதுமானவர்கள். மீதமுள்ளவர்களை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு உதவியாளராக, வினாத்தாள் தயாரிப்பவராக, தேர்வு கூட கண்காணிப்பாளராக என்று பணியிலமர்த்த வேண்டும். சிறப்பாக பணி புரியும் ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர், உதவிக் கல்வி அலுவலர் என்ற பணி உயர்வுகளை விடுத்து தேசிய அளவில் அங்கீகாரத்தை ஏற்படுத்த வேண்டும்; அதாவது தேசிய அளவில் ஆசிரியர்களுக்கான தர வரிசைப் பட்டியலை தயாரித்து முதல் பத்து இடங்களை பிடிக்கும் ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவரின் கையால் 'நல்லாசிரியர்' விருது அளிக்க வேண்டும்; சிறந்த ஆசிரியர்களின் உதவி கொண்டு ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி துறைகளையும் தேசிய அளவில் அமைக்க வேண்டும்; அதேபோல் நாட்டின் அனைத்துப் பள்ளிகளுக்கும் தர வரிசை நிர்ணயித்து,பின்தங்கியப் பள்ளிகளுக்கு இந்த 'நல்லாசிரியர்களை' பயன்படுத்த வேண்டும்;நாட்டின் சிறந்த பள்ளிகளுக்கு பிரதமர் நேரில் சென்று உரையாற்றி, மாணவர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். மேலும் ஒருமுறை ஆசிரியர் நியமனத் தேர்வுக்கான நேர்முகக்காணலில் தோல்வியடைபவர்க்கு கூடுதலான தகுதிச் சுற்றுகளுடன் கூடிய மறுதேர்வை நடத்த வேண்டும். இதனால் தரமான,திறமையுடைய ஆசிரியர்களை அடையாளம் காண முடியும்.


அரசுப்பள்ளிகளுக்கு சிறந்த கட்டிடங்கள், சோதனைச்சாலைக் கூடங்கள், நூலகங்கள்,குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இவற்றுடன் ஒவ்வொருப் பள்ளிக்கும் பள்ளி வாகனம் என்பதை கட்டாயமாக்க வேண்டும். பள்ளி வாகனங்களின் ஒட்டுனருக்கென்று குறிப்பிட்டத் தகுதிகளையும் விதிமுறையாக்க வேண்டும். நூலகங்களில் பஞ்சதந்திரக் கதைகளை வாங்குவதோடு நிறுத்திவிடாமல் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், சுய முன்னேற்ற புத்தகங்களையும் கொண்டுவர வேண்டும். மேலும் எந்த ஒருத் துறையின் (தொழில்நுட்பம், தொழில்துறை, விவசாயம், மண்ணியல், தொல்பொருள் ஆராய்ச்சி, பொருளாதாரம்...)செயல்பாடுகளையும், அதன் முடிவுகளையும் நாளைய இந்தியாவின் சிற்பிகளான இன்றைய இளம் சிறார்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு நூலகத்திற்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இரண்டு வருடத்திற்கு முன்னதான தகவல்களை பெற வேண்டுமானால் நூலகங்களை நாடினாலே போதும் என்ற நிலை வந்தாலே எல்லாத்துறைகளையும் பற்றின தெளிவை மாணவர்கள் மட்டுமின்றி இன்றைய தலைமுறையினரும் பெறமுடியும். அரசுப்பள்ளிகளில்தான் இத்தகையத் தகவல்களை பெற முடியும் என்ற நிலையைக் கொண்டு வந்தால்தான் அரசுப்பள்ளிகளின் மதிப்பும் உயரும். இதெல்லாம் நடக்கும் விஷயமா என்று ஒரு சிலர் நினைக்கலாம். ஏன் முடியாது?கணினித் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூலகங்களை ஒருங்கிணைக்க முடியுமல்லவா? இந்த ஒரு விஷயம் நடந்தாலே போதும் அடுத்த ஊழலற்ற,நேர்மையான தலைமுறையை உருவாக்க!!


அண்மையில் அரசு 'அனைவருக்கும் கல்வி' என்ற சட்டத்தை செயல்முறைப்படுத்தியது; மேலும் தேசம் முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் என்பதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஐந்தாம் வகுப்பு வரை அந்தந்த மாநிலங்களின் மொழிகளில் படிக்கலாம் என்றும் 6-முதல் 12-ஆம் வகுப்புகள் வரை ஆங்கில மொழிவழிக்கல்வி என்பதையும் கட்டாயமாக்க வேண்டும்.இது மொழிப்பிரச்சினையை தவிர்க்க உதவுவதோடு அனைவருக்கும் தரமான கல்வி என்ற ஆரோக்கியமான கல்விமுறையையும் உருவாக்கும். இது சாத்தியமா..? மத்திய அரசாங்கம் மாநில அரசுகளின் பையில் பணத்தைப் போடாமல் தனியாக கல்வி ஆணையத்தை நிறுவி அதன் மூலம் 'அனைவருக்கும் கல்வி ','ஒரே பாடத்திட்டம்' போன்ற சட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே இது நூறு சதவிகிதம் வெற்றியடையும்.

1 கருத்து: