வியாழன், 18 மார்ச், 2010

33%

கடந்த 17 ஆண்டுகளாக இழுபறியாகவே இருந்து வந்த 33% மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மார்ச் 9,2010 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.மேலும் இச்சட்ட மசோதா லோக்சபாவிலும்,மாநில சட்டசபைகளிலும் ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக்கப்படும்.
இச்சட்ட மசோதாவிற்கு பா.ஜ.க,இடதுசாரி கட்சிகள்,தி.மு.க, அ.தி.மு.க என பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும்,ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் இன்னும் எதிர்த்த வண்ணம்தான் உள்ளனர்.எதிர்ப்பதற்கான வர்ண சாயங்களோ 'சிறுபான்மையினருக்கும்,பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு' என்பதே! இவர்கள் உண்மையிலேயே உள்ஒதுக்கீட்டுப் பிரச்சனைக்காக எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அல்ல...எங்கே ஆண்களுக்கான அதிகாரம் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தால்தான்!

பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்று ஒருபுறம் வேஷமிட்டுக்கொண்டும், 'பெண்கள் நாட்டின் கண்கள்' என்று வசனங்களை உதிர்த்துக்கொண்டும் வாக்குகளை வாங்கிக் கொள்ளும் சில அரசியல் கட்சிகளே பெண்களுக்கு எத்தனை தொகுதியில் சீட்டுக் கொடுத்துள்ளன என்று பார்த்தால் உண்மை புரிந்துவிடும். ஏன் இவர் இல்லையா?இந்த கட்சி இல்லையா?என்று சுட்டிக் காட்டுபவர்கள் முதலில் அரசியல் குடும்ப பின்னணியை சாராத பெண்கள் குறிப்பிட்ட காட்சிகளில் எத்தனை பேர் உள்ளனர் என்று சிந்தித்து பாருங்கள்!இந்த நிலையை மாற்றுவதற்காகதான் அரசு குறிப்பிட்ட சதவிகிதத்திலாவது(33% சதவிகிதம் என்றிருக்க அவசியமில்லை)பெண்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று கருதுகிறது.இட ஒதுக்கீட்டிலேயே சீட்டு வாங்கிவிட்டால் ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதிகளில் திறமையானவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுமே என்று ஆதங்கப்படுபவர்கள் பெண்களுக்கு அரசியல் திறமை இருக்காது என்று முடிவுக்கு வந்தவர்களே!நாம் சற்று சிந்தித்தோமானால் பிரதமராயிருந்த இந்திராகாந்தி,தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,தமிழக முதல்வராயிருந்த ஜெயலலிதா,நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் என்று அரசியலில் முன்னனி இடங்களை பிடித்த பெண்களும் நம் நாட்டில் உள்ளனர்.

பெண்களுக்கான வாக்குரிமை,தனி காவல் நிலையம்,பெண்களுக்கெதிரான வன்முறை தடுப்பு சட்டங்கள் என்று பெண்ணியம் பேசும் நம் நாட்டில் பெண்ணுரிமை இன்னும் கிடைக்கவில்லை என்பதையே இதுக் காட்டுகிறது!ஒருகாலத்தில் ஹரிஜன மக்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றனர் ஒரு பிரிவினர்.பின் அரசு அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் சென்று வரலாம் என்று சட்டமே இயற்றியது.காலப் போக்கில் அயல்நாட்டவரும் எந்தவித நிபந்தனையுமின்றி கோயிலுக்குள் சென்று வரும் நிலை உருவாகிவிட்டது.இதற்கெல்லாமா சட்டம் இயற்றப்பட்டது என்று எண்ணும் அளவுக்கு நம் மனநிலையும் மாற்றம் பெற்று விட்டது.அதேபோல்தான் இன்று இயற்றப்படும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமும் நாளை 50% பெண்கள் நாடாளுமன்றத்தில் பங்கேற்கும்போது 33% பெண்கள் கூடவா அரசியலில் இல்லாமலிருந்தார்கள் என்று வியக்கும் அளவுக்கு மாறப்போகிறது!எனவே எதிர்ப்புகளில்லாமல் எந்த ஒரு காரியமும் வெற்றியடையபோவதில்லை.இவர்கள் எதிர்ப்பது ஒருபுறமிருக்கட்டும்.கல்வி,மருத்துவம்,பொறியியல்,வானியல் ஆராய்ச்சி ஏன் இராணுவம் என்று எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் நம் பெண்கள் அரசியலுக்கு மட்டும் வரத் தயங்குவது ஏன்?இன்றைய வன்முறை அரசியல் கலாச்சாரத்தாலா...?அல்லது ஊழல்,மோசடி போன்ற சமூகக் குற்றங்களுக்கு அஞ்சுவதனாலா...? "அரசியல் குடும்பப் பெண்ணுக்கு ஒத்து வராது" என்று ஒதுங்கும் பெண்களே,நீங்கள் அரசியலில் கால் பதித்தால் ஒருவேளை இவை அனைத்தும் மாற்றம் பெற்று புதுப்பொலிவுடன் இந்தியா திகழும் அல்லவா?எனவே அரசியலை ஒதுக்காதீர்கள்!அரசியலை வெறுக்காதீர்கள்!எதிர்வரும் தேர்தல்களில் துணிந்து வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்யுங்கள்!அதுவே அரசின் கனவும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக