செவ்வாய், 7 ஜூலை, 2009

அரசியலில் இளைஞர்கள்....?

அரசியலில் இளைஞர்களுக்கும் வாய்ப்பு வேண்டும்.இதுதான் எல்லோர் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கும் விஷயம்.அதெல்லாம் சரி... எத்தனை இளைஞர்கள் இன்று அரசியலில் ஈடுபட தயாராக இருக்கின்றனர்?அல்லது அப்படி ஈடுபட்ட இளைஞர்களில் எத்தனை பேர் ஆட்சியில் உள்ளனர்?சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னரே மகாகவி பாரதியார்,


        ஒளிப்படைத்த கண்ணினாய் வா வா
உறுதிக்கொண்ட நெஞ்சினாய் வா வா

என்று அறைகூவல் விடுத்தும் ஒரு இளைஞனும் செவிசாய்த்தானில்லை.தமிழ்நாட்டை 85 வயது இளைஞர் ஆண்டு கொண்டிருக்கிறார்;அவரது ஆட்சியிலும் அவர் வயதொத்த இளைஞர்களே இடம்பிடித்த்ள்ளனர்.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை ஆட்சி செய்த தி.மு.க.,அ.தி.மு.க இவ்விருக் கட்சிகளுமே ஒரு இளைஞனை அமைச்சராக்கிப் பார்த்ததில்லை.வழிவழியாக அரசியல் செய்யும் குடும்பத்திலிருக்கும் மூத்தவர்களுக்கே வாய்ப்புத் தரப்படுகிறது.வயதானவர்களுக்குதான் அனுபவ அறிவு இருக்கும் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்;இளைஞர்களுக்கோ சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமிருப்பதால் புதியத் திட்டங்களின் ஊற்றுக்கண்களாக திகழ்கிறார்கள்.1950- களிலேயே பண்டித ஜவர்ஹலால் நேரு அவர்கள், "The destiny of india will be shaped by the classroom" என்று வருங்கால பாரதத்தின் சிற்பிகளாக இளைய சமுதாயத்தினரைக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இன்றுவரை இளைஞர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.

தமிழ்நாட்டில்தான் இப்படி என்றால் நாடாளுமன்ற ஆட்சியில் இப்போதுதான் இளைய சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.ஒருவழியாக 39 இளைஞர்கள் பதவி ஏற்பு என்று சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்றால், முன்னாள் சபாநாயகர் பி.எ.சங்மாவின் மகள்,பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவின் மகன்,மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் பைலட்டின் மகன்,முன்னாள் காஷ்மீர் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லாவின் மகன்,விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரின் மகள்,தமிழக முதல்வர் கருணாநிதியின் மகன் மற்றும் பேரன்,காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்தின் மகன்....


இப்படி அங்கும் அரசியல் வாரிசுகளுக்கே இடமளிக்கப்பட்டுள்ளதேத் தவிர,உண்மையாக திறமையான,சமூக அக்கறை உள்ள மனிதர்களைத் தேடித் பிடித்து பதவித் தரப்படவில்லை.


இளைஞர்கள் வந்தால் ஓட்டுப்போடுவோம்;யாரும் வரத்தயங்குகிறார்களே என்று கூறும் மக்களுக்கு என் கேள்வி இதோ-

தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு ஏன் வெற்றியடையவில்லை?

காரணம் இந்த தொகுதி இவருக்குத்தான் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. 'அரசியல்வாதிகளே மோசம்' என்று வேதாந்தம் பேசுபவர்களுக்கு ஏனோ புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க மனம் வருவதில்லை.தனக்கு எந்த கட்சியால் லாபம் என்று பார்க்கத் துவங்கிவிட்டனர். பொதுப்பிரச்சனைகளைக் குறித்த ஆர்வம் மக்களிடையே குறையத் துவங்கிவிட்டது.தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் குறிப்பிட்ட ஒரு படிப்புப் படித்து, வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் அல்லது தங்கள் தொழிலைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர்; இதையேதான் அரசியல்வாதிகளும் நினைக்கின்றனர்,தங்கள் பிள்ளைகள் அவர்களுடைய குலத்தொழிலான அரசியலுக்கு வரவேண்டும் என்று.அப்படி வரும் இளைஞர்களாவது மாற்றுக்கருத்துடன் செயல்பட்டு,லஞ்சம் ஊழலற்ற அரசாங்கத்தை ஏற்படுத்தி,அடிமட்ட மக்களுக்கு இலவசமல்லாத நிரந்தர நலப்பணிகளை செய்வார்களேயானால் 2020-ல் இந்தியாவைப் பற்றின டாக்டர்.அப்துல் கலாமின் கனவுகள் 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவேறிவிடும்.அதற்கு 'முதலில் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு;பொய்,புறங்கூறாமை வேண்டும்.'என்ற கலாம் அவர்களின் அறிவுரையை ஆசிரியர்கள் ஏற்று மாணவர்களின் மனதில் சமூகம் குறித்த நல்லப் பதிவை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்களும் கல்வியை வியாபாரமாகப் பார்க்கும் மனப்போக்கையும்,நமக்கேன் வம்பு என்று ஒதுங்குவதையும் விடுத்து,தங்கள் பிள்ளைகளை சமூக அக்கறை உள்ள மனிதனாக வளர்க்க வேண்டும்.தேசப்பற்று என்பது காஷ்மீர் போரில் மரணமடைந்த வீரர்களுக்காக வருத்தப்படுவதும்,நிதித் திரட்டித் தருவதும் மட்டுமல்ல;வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்களைப் பார்த்து அவர்களின் பசியையும்,தேவைகளையும் போக்க என்ன வழி என்று யோசிப்பதும்தான்.எந்த மனிதனிடத்தில் இந்த சிந்தனை பிறக்கிறதோ,அவன் தனக்காக அதிக செல்வம் தேடி அலைய மாட்டான்;அரசியலை நிச்சயம் ஒதுக்க மாட்டான்;ஊழல் போன்ற செயல்களை ஏற்க மாட்டான்.

இந்தியா என்றுமே வன்முறையை தூண்டும் பேச்சைக் கூட அனுமதித்ததில்லை. ஆனாலும் நம் சமூக அமைப்பில் உள்ள சிறுசிறு குறைபாடுகளே இன்று நம் புலம்பலுக்கு மூலக்காரணம். அதாவது இரண்டு தலைமுறையினருக்கு முன்பு வரை இவர் என் பக்கத்து வீட்டுக்காரர்; என் தெருக்காரர்; என் ஊர்க்காரர் என்று இருந்த குழும உணர்வு இன்று நகரத்து பரபரப்பு வாழ்க்கைக்கிடையே புதைக்கப்பட்டுவிட்டது. மனிதர்களுக்கிடையே இருந்த பரஸ்பர அன்பு,நம்பிக்கை சிதிலமடைந்து போன நிலையில்,'யார் எப்படி போனால் என்ன?நம் வரை சந்தோஷமாக இருக்கிறோமா!' என்ற மனப்போக்குள்ள மனிதர்கள் மிகுந்து விட்டனர்.சமுதாய உணர்வு பிறக்குமிடம் இந்த குழும உணர்வுதான்.இந்த குழும உணர்வு முதலில் பள்ளியில் கற்பிக்கப்பட வேண்டும்.பள்ளியில் குழந்தைகள் ஒற்றுமையாகதானே இருக்கிறார்கள் என்று தோன்றலாம். 'இவன் என் சக மாணவன் ;கஷ்டப்படும் இவனுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும்' என்ற உணர்வை வளர்க்க வேண்டும்.அரசாங்க ஊழியர்களும்,கல்லூரி மாணவர்களும் மாதம் ஒருமுறை சமூகம் சார்ந்த பணிகள் செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்.சின்ன சின்ன தவறுகளுக்காக அளிக்கப்படும் தண்டனை மற்றும் அபராதத் தொகைக்குப் பதிலாக இந்த சமூகப்பணிகளை செய்ய சொல்ல வேண்டும்.சுற்றியிருக்கும் மக்கள் படும் துயரங்களையும்,அவலங்களையும் மனிதனின் கவனத்துக்கு அடிக்கடி கொண்டு வரும்போது இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பு உண்டு;இது என் ஊர், என் மக்கள்,என் நாடு என்ற உணர்வு பிறக்க வழி ஏற்படுகிறது.

சரி...என்ன மாதிரி சமூகப் பணிகள் செய்ய வைப்பது?

பழுதடைந்த மாநகராட்சிப் பள்ளியை தூய்மைப் படுத்துவது,கட்டிடங்களுக்கு வர்ணம் பூசுவது,வருடம் முழுதும் உழைக்கும் காவல்துறை மற்றும் ஆசிரியர்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிப்பது,முதியோர் மற்றும் அநாதை இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக புத்த்தகங்களை வாசிப்பது,அவர்களை மனம் விட்டு பேச வைப்பது இவையெல்லாம் கூட சமூகப் பணிகள்தான்!மனிதனை மனிதன் நேசித்து செய்யும் எந்த பணியும் சமூகப் பணிதான்!

இப்படிப்பட்ட பணிகளை செய்யத்தான் ஒருசில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றனவே என்று நினைத்து ஒதுங்காமல் இளைஞர்கள் இத்தகைய பணிகளை செய்வார்களேயானால் , சதாசர்வகாலமும் மக்களின் பசி, வறுமையைப் பற்றி பேசுவது குறைந்து எதிர்காலத்தில்மக்களின் தேவையை எப்படி பூர்த்தி செய்வது என்று எண்ணும் அளவுக்கு நாடு வளர்ச்சியடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவை எதுவும் ஒருநாள் ஓரிரவில் ஏற்பட முடியாதுதான். ஆனால் ஏதேனும் ஒருகட்சியாவது ஒரு இளைஞனுக்காவது வாய்ப்பு கொடுத்தார்களேயானால் அதுவே நம் கனவிற்கு மிகப் பெரிய அடித்தளமாக அமையும். மேலும் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற சுதந்திரத்தை கட்டுப்படுத்தி,'தேர்தலில் நிற்க குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பும்,மக்கள் நலப்பணியும் செய்திருக்க வேண்டும்' என்று சட்டம் கொண்டு வரவேண்டும்.

2 கருத்துகள்:

  1. முழுமையாய் ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் கருத்துக்களை. நீங்கள் குறிப்பிட்டிருப்பவை என் ஆதங்கமும் கூட! ஆதலால் நான் உரக்க வழிமொழிகின்றேன் உங்கள் கருத்துக்களுக்கு. ஆயினும் ஒரே ஒரு கருத்தில் வேறுபடுகின்றேன். சின்ன சின்ன தவறுகளுக்காக கொடுக்கப்படும் தண்டனைக்கும், அபராதத் தொகைக்கும் பதிலாக சமூகப் பணி மேற்கொள்ளச் சொல்லலாம் என்கின்றீர்கள். அப்படிச் செய்தால், சமூகப் பணி செய்வது ஒரு தண்டனை என்றாகிவிடும் அபாயம் உண்டு என்பதால் தான் அக்கருத்திலிருந்து வேறுபடுகிறேன்.

    சமூகப்பணி மீது மாணவர்களுக்கு ஆர்வம் வளர்க்க வேண்டும். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இதற்காக மனது வைக்க வேண்டும். முக்கியமாய் ஆசிரியர்கள்! பள்ளி மாணவர்களுக்கு எப்போதுமே ஆசிரியர் சொல் வேதவாக்கு. அங்கேயே விதைக்கவேண்டும் சமூக ஆர்வத்தினை. உள்ளூர் பத்திரிகைகள், உள்ளூர் டி.வி சேனல்கள் இவை யாவும் இது போன்ற சமூகப்பணி செய்யும் இளைய சமுதாயத்திற்கு ஊக்கம் கொடுக்க வேண்டும்.

    கலை வளர்க்க போட்டி வைத்து கோடி கோடியாய் கொடுக்கும் வியாபார நிறுவனங்கள் கோடிகளில் கொஞ்சம் சமூகத்திற்கும் ஒதுக்க வேண்டும். ஒரு ஊரில் ஐந்து பள்ளியா? ஐந்து பள்ளிக்கும் ஊரில் ஒவ்வோர் இடத்தை பிரித்துக் கொடுத்து அங்கே அவர்களுக்கு தோன்றும் விதம் சமூகப்பணிகளை பயனுள்ள பணிகளை செய்யக்கூறி ஒரு போட்டி வைத்து "ரியாலிட்டி" ஷோ நடத்தலாம். ஆர்வமுடன் பங்கேர்க்கும் மாணவ மணிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு பரிசுகள், பாராட்டுகளை மிகப்பெரிய அளவில் கொடுக்கலாம். இதன் மூலம் மாணவர்களிடையே சமூக ஆர்வத்தினை வளர்க்கலாம். இப்படித்தான் வளர்க்கவேண்டும் என்றல்ல நான் கூறுவது, இப்படியும் வளர்க்கலாம் என்கிறேன்.

    ராப் என்றும் பாப் என்றும் டிஸ்கொத்தே டேட்டிங் என்றும் பொழுது சாய்ந்தால் பீர் என்றும் கண் முன்னே சிதைந்து கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தை பார்க்கும் போது பரிதாபம் மட்டுமல்ல பயமும் சேர்ந்தே வருகிறது.

    நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள். சிறு கட்டுரையும் வளமான எதிர்காலத்திற்கு போடும் ஒரு பிடி உரம்தான். அவ்விதத்தில் இக்கட்டுரை நல்ல தரம் தான். வழங்கியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. நன்றி சில்வண்டு!உங்களுடைய கருத்தைப் படித்ததும் இன்னும் நிறைய சொல்லியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.முக்கியமாக அந்த 'ரியாலிட்டி ஷோ' பற்றினக் கருத்து!மேற்கத்திய நாகரீக மோகத்தில் எது எதுக்கோ 'ரியாலிட்டி ஷோ' நடத்தும் நாம் ஏன் இதுநாள் வரை இதைப் பற்றி யோசிக்கவில்லை?


    /சின்ன சின்ன தவறுகளுக்காக கொடுக்கப்படும் தண்டனை மற்றும் அபராதத் தொகைக்குப் பதிலாக சமூகப் பணிகள் செய்ய சொல்லலாம்/ இப்படி நினைக்க காரணம்-


    மாத அல்லது வருடக் கணக்கில் சிறையில் ஒரு மனிதனை தனிமைப் படுத்துவதன் மூலம் அவன் சமூகத்திற்கு எதிர்மறையாளனாக (சுய இரக்கம்,பழி வாங்கும் உணர்வு,அவமானம்,தற்கொலை எண்ணம்)வெளிவருகிறான்.தவிர அபராதத் தொகையால் பணமிருப்பவர்களுக்கு தவறு செய்யும் வசதியும் வந்து விடுகிறது.
    கொலைக்கே மரண தண்டனை வழி அல்ல எனும்போது, சின்ன சின்ன தவறுகளுக்கு சக மனிதனின் துயரத்தை முன்னிறுத்தி அவனுடைய தவறை தண்டிக்கலாமே!

    பதிலளிநீக்கு