வன்முறையில் இஷ்டமில்லை
என்றாலும்
வன்முறை நடக்கும்போது தடுக்காமல் வேடிக்கை
பார்த்து செல்லும் மக்களில்....
நானும் ஒருவன்!
உயிர்களைக் கொல்வது பாவம்
என்ற எண்ணம் இருந்தாலும்
உணவகங்களில் உறுத்தலில்லாது மாமிசம்
உண்ணும் ஜீவன்களில்
நானும் ஒருவன்!
காந்தியே....
புகைப்படத்திலிருந்து நீ
எனை குறுகுறுவெனப் பார்த்தாலும்....
எண்ணத்துக்கும் நடைமுறைவாழ்வுக்கும் உள்ள
இடைவெளியில் பழகிப்போன
பெரும்பான்மை சராசரிகளில்
நானும் ஒருவன்!
நீ....
உபயோகித்த ஒற்றை ஆடை
தடி, கண்ணாடி
இவைகளே
சுத்திக்கடியில் சிக்கி
விலைபோய் விட்டன!
நல்லவேளை....
உன் கொள்கைகளோ சிந்தனைகளோ
லாபம் தரும் ஏலப் பொருளாகவில்லை!
உன் வழிவந்தோரும்
உன் பெயரில் அரசியல் பிழைத்தோருமே
கவலைப்படாத அவற்றை
பின்பற்றுவதால் லாபமில்லை என்ற
தனிமனித சிந்தனையே மேலோங்கி நிற்கையில்....
ரூபாய் நோட்டில் பார்க்கும்
உன் சிரித்த முகம் கூட....
எங்களை எள்ளி நகையாடுகிறது!
எனினும்
வெட்கமின்றி மகிழ்கிறோம்
உன் சிரிப்பைக் கண்டு!
உங்கள் கவிதைகளில் சில உவமை உவமேயங்கள் வண்டினை மிகவும் கவர்கிறது. இதோ இக்கவிதையில் ஏலம் விடப்பட்டதை நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விதம். "சுத்திக்கடியில் சிக்கி விலைபோயின!"
பதிலளிநீக்குமற்றபடி கவிதையில் சராசரி மனிதனை படம் பிடித்திருக்கின்றீர்கள். "இப்படியெல்லாம் இருக்கவேண்டும் ஆனால், இப்படித்தான் இருக்க இயல்கிறது" - என்று கவலைப்படும் ஒரு மனிதன். உண்மையில் இவன் சராசரி அன்று.
இப்படி தான் இருப்பதற்கு கவலைகொண்டு, சுயமாய் தன்னை அறிந்து மதிப்பீடு செய்துகொள்ளும் இவன் சராசரிக்கும் ஒரு படி மேல் இருப்பவன். இது கூடப் போதும். அனைவரும் இக்கவலை கொண்டிருந்தாலே காந்தியின் புன்னகைக்கு நியாயம் செய்திட இயலும்.
ஆகையால், இக்கவலைகளை இதோ போல் அணையாது கொண்டிருப்போம்!
பின்னூட்டத்தின் மூலம் இதயத்தை 'சில்'லென்று ஆக்கிய சில்வண்டிற்கு நன்றி!
பதிலளிநீக்கு